மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

முதுநிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு ஏன் இல்லை?

முதுநிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு ஏன் இல்லை?

சிறப்பு நேர்காணல்: டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

சந்திப்பு: ர.ரஞ்சிதா

(அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் முதுநிலை மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என மத்திய அரசுக்குச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை இச்சங்கம், மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, ‘தமிழக முதல்வர், பிரதமருக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்புவார்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம். இந்தப் பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் ரவீந்திரநாத் விரிவாக எடுத்துக்கூறினார். அவருடைய கருத்துகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். – ஆசிரியர்)

பிரச்சினையின் பின்னணி

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாகப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை மாநில அரசிடம் கொடுத்துள்ளோம். முதலமைச்சரும் சுகாதாரத் துறை அமைச்சரும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் முதுநிலை மருத்துவக் கல்வியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல், இளநிலை மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், முதுநிலை மருத்துவக் கல்வியில் வழங்கப்படவில்லை.

மத்திய அரசின் இப்போக்கு சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக்கும் எதிரானது. எனவே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த ஆண்டு முதல் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அகில இந்தியத் தொகுப்பில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நீட் தேர்விலும் இடஒதுக்கீடு மறுப்பு

நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறு கடந்த ஆண்டு 165 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் எந்த மருத்துவக் கல்லூரியிலும் அகில இந்தியத் தொகுப்பின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியது. 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் 2100க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இந்த 8,000 இடங்களில் சேர்ந்திருக்க முடியும். இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமை பறிபோய்விட்டது.

சமூகநீதிக்கு எதிரானது

அகில இந்தியத் தொகுப்புக்குத் தமிழகத்தில் 50 விழுக்காடு இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அந்த 50 விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்காமல் இருந்தால், அதில் தமிழக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் கிடைத்திருக்கும். அகில இந்திய ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிராக அமைந்துவிட்டது.

மத்திய அரசின் டி.என்.பி. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் எஸ்.சி/எஸ்.டிக்கு ஒரு சில இடங்களே ஒதுக்கப்பட்ட நிலையில், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடே வழங்கப்படவில்லை. இந்தப் படிப்புகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கே அதிகாரம்

இதய மருத்துவம், இதய அறுவை சிகிச்சை போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100 விழுக்காடு இடங்களும் தமிழக மருத்துவர்களுக்கு மட்டுமே கிடைத்துவந்தது. இந்த நிலையில் இப்படிப்புகளில் 100% இடங்களும் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தவரும் சேரும் வகையில் பகிரங்கப் போட்டிக்கு விடப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு இருந்துவந்த 50% இடஒதுக்கீடும் பறி போய்விட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தையும்,கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் உடனடியாகத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை,முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 100 விழுக்காடு இடங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் வகையில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இந்திய மருத்துவக் கழகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளால் இந்த இடஒதுக்கீடுகள் ரத்தாகியுள்ளன. இது அரசு மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் ஏழை மக்களுக்கும் எதிரானது.

முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு விழுக்காட்டைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமே வழங்கிடும் வகையில், இந்திய மருத்துவக் கழகத்தின் (MCI) விதிமுறைகளில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் அவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். அதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

தனியாரிடம் தரக் கூடாது

துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமானது, கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் சாதகமாக உள்ளது.

இத்திட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் உள்ளது. பொதுச் சுகாதாரத் துறையை வலுவிலக்கச் செய்யும் வகையிலும் உள்ளது. எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

அத்திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கான 60 விழுக்காடு நிதியை மாநில அரசிடம் வழங்க வேண்டும். அந்நிதியை அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் தொடங்கிடவும், ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திடவும் தமிழக அரசு பயன்படுத்திட வேண்டும்.

மத்திய அரசு தொடங்க உள்ள 82 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றுகூடத் தமிழகத்தில் தொடங்கப்படாதது கண்டனத்துக்குரியது. மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியில் தமிழகத்துக்கான பங்கை ஒதுக்கீடு செய்து தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அதைக்கொண்டு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டத்தில், மாநில அரசு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விரும்பும் மாணவர்களுக்குத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட். மருத்துவம் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கும் வெளிநாட்டில் போய் மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும். மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திட, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் மூலம் தமிழக அரசு உதவிட வேண்டும். ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டணத்தைத் தமிழக அரசே செலுத்த வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மையங்களைத் தமிழக அரசு முறையாகத் தொடங்காதது கண்டனத்துக்குரியது.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களையும், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களில் இளநிலை, முதுநிலை உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 65 விழுக்காட்டு இடங்களையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிட வேண்டும். அதற்குகந்த சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில், மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் அவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். அதற்கு, இந்திய மருத்துவக் கழக விதி முறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசிய உரிமத் தேர்வு (National Licenseate) என்ற எக்ஸிட் தேர்வைப் புகுத்தக் கூடாது.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை முடித்த பிறகே, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை மத்திய – மாநில அரசுகள் நடத்திட வேண்டும். மேலும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை கவுன்சலிங்

சென்ற ஆண்டு, ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக இடங்களுக்கு மத்திய அரசு ஒரே நேரத்தில் கவுன்சலிங்கை நடத்தியது. அதனால் மாணவர்களுக்குக் குழப்பங்கள் ஏற்பட்டன. நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் 95 விழுக்காடு மருத்துவ இடங்கள் முதல் சுற்று கவுன்சலிங்கில் நிரப்பப்படாமல் இருந்தது. மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில், தனியார் பல்கலைக்கழகங்கள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டன.

இதனால் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு, கட்டாய நன்கொடை மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனவே, ஒரே நேரத்தில் அரசு மருத்துவ இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கை நடத்தக் கூடாது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்திட வேண்டும்.

மத்திய அரசின் முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த உடன், தமிழக அரசு தனது கவுன்சலிங்கை காலதாமதம் இன்றி உடனடியாக நடத்திட வேண்டும். இரண்டாம்கட்ட கவுன்சலிங்கை மத்திய அரசு முடித்தவுடன், தமிழக அரசும் இரண்டாம்கட்ட கவுன்சலிங்கை உடனடியாக, மே 1ஆம் தேதிக்குள் நடத்திட வேண்டும்.

இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைப் போக்க வேண்டும். மேலும், இருப்பிடச் சான்றிதழ் பெறுவதில், வெளிமாநிலத்தில் உள்ள தமிழக மாணவர்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகிய கோரிக்கைகளை சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கமும் மற்றும் அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கமும் இணைந்து வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கியுள்ளோம். இதுகுறித்து பரிசீலனை செய்கிறோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடைபெறும்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon