மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: இன்றைய உலகமும் நம்முடையதுதான்!

கிச்சன் கீர்த்தனா: இன்றைய உலகமும் நம்முடையதுதான்!வெற்றிநடை போடும் தமிழகம்

நாளைய உலகம் மட்டுமல்ல தோழிகளே... இன்றைய உலகமும் நம்முடையதுதான்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலை மாறி, அடுப்படியில் கலைத் திறனோடு செய்யும் வேலையே ஒரு கல்வி என்றாகி, பெண்கள் இன்று கால் பதிக்காத இடங்களே இல்லை என்பதுதான் நிஜம்.

சுமார் பத்தாண்டுங்களுக்கு முன்பு, ‘நான் சும்மா வீட்லதாங்க இருக்கேன்’ என்று சொல்லிக்கொள்ள மிகவும் வெட்கப்பட்டனர் பெண்கள். ஆனால், இன்று ‘ஹோம் மேக்கர்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவு வளர்ந்துவிட்டனர்.

வீட்டிலிருந்தே சில பணிகள் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். அரசும் சில திட்டங்கள் மூலம் உதவுகிறது. இன்று பல கணவர்கள் மதியம் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தானே அந்தக் குடும்பத்தின் ஆணிவேர் என நினைத்தும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வதாகவும் நினைத்துக்கொள்கின்றனர்.

வருமானம் ஈட்டவே, அதாவது கம்பெனியில் நல்ல பெயர் எடுக்க முதலாளிக்காகவே கடின உழைப்பைக் கொட்டுகிறார் குடும்பத்தலைவர். ஆனால், இல்லத்தரசியோ தூக்கம் தொலைத்து, கணவனுக்காகவும், பிள்ளைகளுக்காவுமே அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

வீட்டிலிருக்கும் பெண்களாகட்டும் வேலைக்குச்செல்லும் பெண்களாகட்டும், கணவன்மார்களே உங்களிடம் கேட்பது ஃபேஸியலுக்குப் பத்தாயிரமோ, மாதம் ஒரு பட்டுப்புடவையோ அல்ல. அவ்வப்போது இரு நாளைக்கு ஒரு முறையேனும் “நீ சாப்பிட்டாயா?” என்று கேளுங்கள் போதும். முடிந்தால் தினமும்.

மதியம் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ஆஹா... ஓகோ என புகழ்ந்து உடனடியாக போன் செய்ய வேண்டாம். பாத்திரங்களை முடிந்தால் நீங்களே கழுவி எடுத்து வாருங்கள்.

‘என் தலையெழுத்து, வீட்ல எல்லா வேலையும் நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கு. ஒரு நாள் நீங்க செஞ்சாதான் என்னவாம்?’ என்ற கேள்விக்கு இடம்தர வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளில் அரை நாள் வீட்டைத் தூய்மைப்படுத்தித் தாருங்களேன்.

சுடிதாரையோ, புடவையையோ மடித்துத்தர வேண்டாம். வாஷிங் மெஷினில் கிடக்கும் உங்கள் துணிகளைக் காயவைத்து விட்டாவது வாருங்களேன்.

அலுவலக டென்ஷன்களை பெரும்பாலும் வீட்டில் காட்டாமலிருப்பது நலம். (சீரியல் டென்ஷன்களைப் பெரும்பாலும் கணவன்மேல் திணிப்பதில்லை பெண்கள்)

உயர்த்தி பேச நேரமோ சூழலோ இல்லை என்றாலும் தாழ்த்திப்பேச வேண்டாம்.

அவ்வப்போது கிச்சனில் சிறு சிறு உதவிகள் செய்யலாம். அன்பாக ஓரிரு வார்த்தைகள் பேசலாம். இது போதுமே ஒரு பெண்ணுக்கு.

பெண்களே... சக பெண்களோடு அன்பாயிருப்போம். டெக்னாலஜிகளுக்கேற்ப தேவைகளும் சூழல்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாமும் மாற வேண்டும். சக தோழிகளோடு அப்பார்ட்மென்ட் கதைகளையும் சீரியல் கதைகளையும் பகிர்வதோடு வட்டத்தைச் சிறிதாக்கிக்கொள்ளாமல், தொழில், முன்னேற்றம், புதியன கற்றுக்கொள்ளுதல், பிறருக்கும் உதவுதல் என வட்டத்தைப் பெரிதாக்கிக்கொள்வோம்.

நாளைய உலகம் மட்டுமல்ல தோழிகளே... இன்றைய உலகமும் நம்முடையதுதான்.

வாழ்ந்துகாட்டுவோம். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon