மின்னம்பலம்
இந்தியாவின் ஆடைகள் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியானது சர்வதேசப் போட்டி மற்றும் உள்நாட்டில் கொள்கை மாற்றங்களை அணுகும் விதம் போன்றவற்றைச் சார்ந்தே இருக்கும் என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்ரா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜெயந்தா ராய் இதுகுறித்து மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் பேசுகையில், “சென்ற 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றமே இத்துறை எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்றாகும். அந்நிய செலாவணி மதிப்புகளைப் பொறுத்தே இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் அமைகிறது. புதிய வரி நடைமுறையில் சிக்கல்களைச் சமாளித்து, சர்வதேசப் போட்டிகளை எதிர்கொண்டால் மட்டுமே இந்திய ஜவுளித் துறையின் வளர்ச்சி மேம்படும்” எனத் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 முதல் 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஐக்கிய அரசு அமீரகத்தின் பங்கு 2013-14 நிதியாண்டில் 12 சதவிகிதத்திலிருந்து 2016-17 நிதியாண்டில் 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.