மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 மா 2018

டிஜிட்டல் திரையிடல்: காமதேனுவா, காராம்பசுவா?

டிஜிட்டல் திரையிடல்: காமதேனுவா, காராம்பசுவா?

இராமானுஜம்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் - 10

தமிழ் சினிமாவில் பார்வையாளர் வருகை குறைந்துவிட்டதற்குக் காரணம், அதிகமான டிக்கெட் கட்டணம். இணையம் மூலம் முன்பதிவு செய்யக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து, திருட்டு சிடிக்கள் அதிகரித்துவருவதாகத் திரைப்பட விழாக்களில் தயாரிப்பாளர்கள் புலம்புவது வாடிக்கை.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று விஷால் தலைமையில் பொறுப்புக்கு வந்த நிர்வாகக் குழு, ‘முன்பதிவுக் கட்டணம் 10 ரூபாயாகக் குறைக்கப்படும். அதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்குப் பங்கு தரப்படும்’ என்று அறிவித்தது. இதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணி இருவரும்தான். ‘இது திரையரங்கு உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்; இதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது’ என்றனர். தங்கள் தியேட்டரில் என்ன வசதி ஏற்படுத்திக்கொள்வதென்பது உரிமையாளரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், 70 ரூபாய் டிக்கெட்டுக்கு 30 ரூபாய் முன்பதிவுக் கட்டணம் அநியாயமானது என்கிற குரல் இன்று வரை எல்லா மட்டங்களிலும் ஒலித்துக்கொண்டுள்ளது.

இணைய முன்பதிவு நடைமுறைக்கு வரும் முன் தியேட்டருக்குச் சென்று முன்பதிவு செய்தால் கட்டணம் இல்லை. இன்றும் அது தொடர்கிறது. சினிமாவில் கலகக் குரல் கொடுக்கும் திருப்பூர் சுப்பிரமணி நடத்தும் தியேட்டர்களில் இணையம் மூலம் முன்பதிவு செய்யாதவர்கள் காட்சி தொடங்கும் முன்னதாக டிக்கெட் வாங்கச் சென்றால் முன்பதிவுக் கட்டணம் 50% வீதம் வசூலிக்கப்படுகிறதாம். இது தமிழ்நாட்டில் எந்தத் திரையரங்கிலும் இல்லாத நடைமுறை.

தியேட்டர்களில் வசூல் கணக்கில் தவறு நடக்கிறது. நேர்மையான வசூல் கணக்கைத் தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர்கள் கொடுப்பதில்லை, திருடப்படுகிறது என எல்லா காலகட்டங்களிலும் சினிமாவில் கூறப்பட்டுவருகிறது. கடந்த சில வருடங்களாக இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதில் கூறும் ஒரே விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணி. பல பேட்டிகளிலும் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் சுப்பிரமணி.

‘கோவை விநியோகப் பகுதியில் இயங்கிவரும் அனைத்து தியேட்டர்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதனை செய்துகொள்ளலாம்’ என்பார். கோவை பகுதியில் அனைத்து தியேட்டர்களும் கணினிமயமாக்கப்பட்டதற்கு திருப்பூர் சுப்பிரமணியின் சுயநலமே காரணம் என்கின்றனர் கொங்கு மண்டல விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும்.

அட்வான்ஸ் கொடுக்காமல், ஒப்பந்தம் எதுவுமின்றி படம் போட்டுத்தருவது, அதற்கு வருவாயில் 5% கமிஷன் கொடுத்துவிட வேண்டும் என்ற முறையில் தியேட்டர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர் (இதற்கு கண்டென்ட் லீஸ் எனப் பெயர்) சுப்பிரமணி. புதிய படங்கள் தன்னிடம் வராமல் வேறு விநியோகஸ்தர்களுக்கு போய்விட்டால் தொடர்ந்து புதிய படம் திரையிட முடியாமல் போகும்; அப்போது தியேட்டர்கள் தன் கட்டுப்பாட்டில் இல்லாது போய்விடக் கூடாது என்பதற்காக முன்பணம் கொடுத்து வாடகை அடிப்படையில் அரங்குகளைத் தன்வசப்படுத்தினார். அத்திரையரங்குகளுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும், நவீனப்படுத்தவும் திருப்பூர் சுப்பிரமணி கையாண்ட யுக்தியை எவராலும் யூகிக்க முடியாதது. சினிமா டிக்கெட் முன்பதிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் BookMyShow எனும் நிறுவனத்தை சுப்பிரமணி பயன்படுத்தினார் என்பதுதான் அந்த யுக்தி.

BookMyShow நிறுவனத்தை தியேட்டர் நிர்வாகம் அனுமதித்து ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது குறைந்தபட்ச அட்வான்ஸ் கொடுப்பார்கள். சுப்பிரமணி சம்பந்தப்பட்ட திரையரங்குகள் என்றால் அவர் கேட்கும் தொகை அட்வான்ஸாகக் கிடைக்கும். அது அந்த தியேட்டரை லீஸுக்கு எடுக்கக் கொடுக்க வேண்டிய தொகையாக இருக்குமாம். தியேட்டருக்குத் தேவையான நவீன புரொஜக்டரை இலவசமாக கியூப் நிறுவனம் வழங்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் நிறுவனங்களின் பாதுகாவலராக சுப்பிரமணி செயல்படுவதால் இவர் சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு பல்பு இலவசம், பராமரிப்புக் கட்டணம் (AMC) இலவசம் என்கின்றனர். பிறகென்ன, கியூப் நிறுவனத்துக்கு விசுவாச ஊழியராகத்தானே இருப்பார், தயாரிப்பாளர்கள் நலனுக்காக, சினிமா வளர்ச்சிக்காக எப்படி குரல் கொடுப்பார் எனக் கேட்கிறார்கள் திரையுலகினர். இவற்றையெல்லாம் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இவரை அருகில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

கோவையில் குறுநில மன்னரான இவரைப் போன்று சேலம், மதுரையைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சிக்கும் ராஜாவைப் பற்றி, நாளை...

முந்தை ய பகுதிகள்:

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

வியாழன் 8 மா 2018