மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிதம்பரம் மீது ரவிஷங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

சிதம்பரம் மீது ரவிஷங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாஜக குற்றம்சாட்டுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்ததையடுத்து, நேற்று (மார்ச் 7), சிதம்பரம் அமைச்சராக இருந்த காலத்தில் மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணையை ஆதாரமாக முன்வைத்துள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்.

2014ஆம் ஆண்டு மே 16ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதற்கு ஒருநாள் முன்னதாக, நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நீரவ் மோடியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் உட்பட ஏழு தனியார் நிறுவனங்களுக்கு 80:20 தங்கம் இறக்குமதி விதியின் கீழ் அனுமதி வழங்கியதாக, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டியது பாஜக. தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு, அவசரமாக இத்தகைய உத்தரவை வெளியிடக் காரணமென்ன என்று கேள்வியெழுப்பியது.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, எந்தவித ஆதாரமும் இல்லாமல் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்படுவதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக, நேற்று பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்.

அப்போது, 2014ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணையை, சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரமாகக் குறிப்பிட்டார். ஆளும்கட்சி ஆதாரம் ஏதும் இல்லாமல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். “அது விலையா? சலுகையா? அழுத்தமா? நன்றிக்கடனா? தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக, முதிர்ச்சியான அரசியல்வாதியான ப.சிதம்பரம் இப்படியொரு முடிவெடுப்பதற்கு என்ன காரணம்?” என்று கூறினார். அரசியலமைப்புச் சட்டம் தெரிந்த யாரும் இந்த காரியத்தைச் செய்ய மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அதே ஆண்டில் மே 21ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினார். “மேற்கண்ட நிறுவனங்கள் 80:20 விதியின் கீழ் உடனடியாக தங்கம் இறக்குமதி செய்ய அந்த உத்தரவு வழி செய்தது. புதிய அரசு பதவி ஏற்பதற்குள், இப்படியோர் அறிவிப்பை வெளியிடக் காரணம் என்ன?” என்றார் ரவிஷங்கர் பிரசாத்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தங்கம் இறக்குமதி செய்வதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய 80:20 விதி, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நீக்கப்பட்டது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon