மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கைதுக்குத் தடை விதிக்க முடியாது!

கைதுக்குத் தடை விதிக்க முடியாது!

தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரைக் கைது செய்யக் காவல் துறைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 1ஆம் தேதி நெடுஞ்சாலை துறையில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகத் தலைமைச் செயலக அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால், அவர்களுக்குக் காவல் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும், சட்டப்பேரவை வளாகத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்து, அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்குகளில் தங்களை கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, “முன்ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவில் குற்ற எண்ணைக் குறிப்பிடவில்லை. எனவே, அதைக் குறிப்பிட்டு தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்தார். இதற்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற எண்ணை இணைத்து, புதிய மனு தாக்கல் செய்வதாகவும், அதுவரை காவல் துறையினர் இருவரையும் கைது செய்யக் கூடாது எனவும் வாதிட்டார். ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon