மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 9

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 9

இராமானுஜம்

கோவை கோட்டையாக மாறியது எப்படி?

கொங்கு மண்டலத்தின் சினிமா வசூல், திரையிடல் இவற்றில் 50% திருப்பூர் சுப்பிரமணி கட்டுப்பாட்டில் என்கின்றனர் திரைத் துறையினர். தமிழகத்தில் செங்கல்பட்டு விநியோகப் பகுதிக்கு அடுத்ததாக அதிக விலையும் வசூல் முக்கியத்துவமும் உள்ள பகுதி கோவை விநியோகப் பகுதி. பிற பகுதிகளில் சுமாரான வசூல் தரக்கூடிய படங்கள்கூட அதிக வசூல் செய்து சாதனை நிகழ்த்தக்கூடிய பன்முக ரசனையுள்ள ரசிகர்கள் கோவைப் பகுதியில் உள்ளனர்.

சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் தடுமாற்றம் ஏற்படுகிறபோது அந்தப் படத்தின் கோவை ஏரியா உரிமையை அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டு ஃபைனான்ஸ் கொடுப்பது சுப்பிரமணி ஸ்டைல் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

பட வெளியீட்டுக்கு முன் ஃபைனான்ஸ் செட்டில் செய்தால்தான் படம் ரிலீஸ் செய்ய முடியும். படம் அவுட்ரேட் அடிப்படையில் வியாபாரம் ஆகாதபட்சத்தில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் ஃபைனான்ஸ் கொடுத்தவரிடமே அந்த ஏரியா உரிமையைக் கொடுக்க வேண்டிய சூழலை ஃபைனான்சியர்கள் ஏற்படுத்திவிடுவார்கள். அவர்கள் சொல்வதுதான் விலை அல்லது அட்வான்ஸ் என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தர்மசங்கடமான நிலை தயாரிப்பாளருக்கு ஏற்படும்.

சமீபகாலமாக வெளியில் தெரியாத வியாபாரக் கூட்டணி தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டு, தமிழ் சினிமாவைக் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலைகள் நடந்துவருகின்றன. அதற்கான முதல் விதை கோவை, மதுரை என இரு விநியோகப் பகுதிகளில் ஊன்றப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட விதை போல உடனடியாகப் பலன் கிடைத்தது கோவை விநியோகப் பகுதியில்தான். அதைச் சப்தமின்றிச் சாதித்தவர் திருப்பூர் சுப்பிரமணி. ஃபைனான்ஸ் மூலம் கோவை ஏரியா உரிமைகளைக் கைப்பற்றும் சுப்பிரமணி, தான் கொடுத்த ஃபைனான்ஸ் தொகைக்குத் தயாரிப்பாளர் கணக்கில் வட்டி எழுதிவிடுவதால் முதலீடு கிடையாது.

திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் தியேட்டரில் புதிய படங்களைத் திரையிட அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக படத்தின் வசூல் மூலம் வரக்கூடிய தியேட்டர் பங்கு தொகையில் 5% கமிஷனாக சுப்பிரமணிக்குக் கொடுக்க வேண்டும். தனக்கு அதிக கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தியேட்டருடன் போடக்கூடிய பங்கீட்டு ஒப்பந்தத்தில் தயாரிப்பாளருக்கு 50%க்கு மேல் சுப்பிரமணி அனுமதிப்பதில்லை எனக் கூறுகின்றனர். பிற ஏரியாக்களில் 60%, 70% என நடைமுறை இருக்கும்போது சுப்பிரமணியின் கட்டுப்பாட்டில் அல்லது இவர் மூலம் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு இதுதான் நிலைமை.

தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் பங்கு தொகையில் விநியோகஸ்தர் கமிஷனாக 10% முதல் 15% கமிஷன் எடுக்கப்படும். சுப்பிரமணி ரிலீஸ் செய்யும் படங்களுக்கு டிஜிட்டல் கட்டணங்களை அவரே கட்டிவிடுவார். அதில் இவருக்குத் தனிப்பட்ட சலுகைக் கட்டணத்தை ரியல் இமேஜ் நிறுவனம் தொடக்கத்திலிருந்தே வழங்கிவருவதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளருக்கு அனுப்பப்படும் கணக்கில் ஒரிஜினல் கட்டணம் இருக்கும். அட்வான்ஸ் இல்லாமல் புதிய படங்கள், அதிகப்படியான பங்கு எனத் திரையரங்குகள் பலனடைந்ததால் படிப்படியாகக் கோவை ஏரியாவில் உள்ள தியேட்டர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் சுப்பிரமணி.

திரையரங்கைக் குத்தகைக்கு எடுக்கும்போது குறைந்தபட்ச அட்வான்ஸ், தியேட்டரை நவீனப்படுத்த டிஜிட்டல் நிறுவனங்களையும், BookMyShow எனும் டிக்கெட் முன்பதிவு நிறுவனத்தையும் சுப்பிரமணி பயன்படுத்திய முறை இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது, அதிர்ச்சிக்குரியது.

அது என்ன? நாளை காலை வரை காத்திருங்கள்...

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon