மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ஹெல்த் ஹேமா: வயசானாலும் அழகும் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம்!

ஹெல்த் ஹேமா: வயசானாலும் அழகும் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம்!

நாளை மகளிர் தினம். பெண்கள் என்றால், வேலைக்குச் செல்லும் வீரப் பெண்மணிகள் மட்டுமே பலரோட கண்முன்னால வந்து போவாங்க. அதிகப்படியாக தம் மனைவியை நினைச்சு பார்ப்பாங்க. ஒரு வாழ்த்துகூட சொல்ல மனமோ, நேரமோ இருக்காது. அப்படிப்பட்ட நேரத்துல, கொஞ்சம் வயதானவர்களை பெரும்பாலானோர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், அவர்களின் பென்ஷன் பணத்தின்போதும், செல்ஃபி எடுக்கும்போதும் காட்டும் அன்பு மிக மிகப்பொய்யானதுன்னு எல்லாருக்குமே தெரியும்.

இப்ப இருக்கிற எல்லாருக்குமே ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொழுப்புச் சத்து, தைராய்டு என பலதும் இருக்கிறது. நம்முடைய உணவு மற்றும் வாழ்வியல் முறையில் உள்ள அழுத்தம் அனைவருக்கும் இந்த நோய்களை பரம்பரையாகவோ, ஸ்ட்ரெஸ், ஸ்ரெயின் காரணமாகவோ கடத்தி வருகிறது. இதுபோக பேரிளம் பெண்களுக்கு என்று உள்ள உடல் நலிவு ப்ரீ மெனோபாஸ் மற்றும் போஸ்ட் மெனோபாஸ். இந்த சமயங்களின் பெண்களுக்கு டென்ஷன், அதிக வியர்வை சுரத்தல், கோப உணர்வு அதிகமாயிருத்தல் என பல இன்னல்கள் அடைவார்கள். IRREGULAR PERIODS எனப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மலர்ந்த பூ மூடிக்கொள்வது போல இந்த நிகழ்வு நடைபெறும். ரத்தப் போக்கு அதிகரித்தால் சில பெண்களுக்கு கர்ப்பையையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்தக் காலகட்டங்களில் பொதுவாகவே வருடத்துக்கு ஒருமுறை ஹெல்த் செக்கப் செய்துகொள்வது நல்லது. நமக்கு எந்த வயது வரை மாதவிடாய் ஏற்படும் என்றும் இன்னும் கர்ப்பப் பை மற்றும் கர்ப்ப வாய் தொடர்பான மற்றும் மார்பகம் தொடர்பான புற்றுநோய்களுக்கும் சோதனைகள் செய்துகலாம். பொதுவா சுத்தமின்மை காரணமா கர்ப்பப் பை மற்றும் கர்ப்ப வாயில் புற்று ஏற்படுது, மற்றும் மார்பகக் கட்டிகள், நாளமில்லா சுரப்பிகள் மூலமா ம்யூட்டேஷன் (MUTATION) என்று சொல்லப்படக்கூடிய காரணமற்ற புற்றுநோய்களும் ஏற்படுகின்றன. இதை அடையாறு இன்ஸ்டிட்யூட் சாந்தாமாவும். பழனி ஆண்டவர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்ற மோகனா சோமசுந்தரம் அம்மாவும் பகிர்ந்துகொண்டார்கள். மேலும் 45 வயதுகுட்பட்ட பெண்கள் புற்று தாக்காமலிருக்கப் போட்டுக் கொள்ளத் தடுப்பூசியும் வந்துள்ளது.

60 வயது தாண்டிய பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பின் எலும்புகள் பலவீனமடைகின்றன. சிலர் கொஞ்சம் குள்ளமானது போலவும் ஆவார்கள். எலும்புத் தேய்மானம் ஆரம்பிப்பது இப்போதுதான். ஆஸ்டியோ போராசிஸ் மற்றும் ஆர்த்தரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோயிலிருந்து தப்பிக்க கால்சியம் அதிகம் உள்ள உணவைச் சேர்ப்பது நல்லது. பால், பால் பொருள்கள், முளைகட்டிய பயறு வகைகள், கீரைகள், முட்டை இவற்றை எடுத்துக்கணும். நம் உடம்புக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளுதோ அதை உண்ண வேண்டும். பொதுவா கொழுப்புச் சத்து நிறைந்த இனிப்பு வகைகள், எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகள், சிப்ஸ், பேக்கரி ஐட்டங்கள், குளிர்பானங்களைத் தவிர்ப்பது நலம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் நல்லது.

கோதுமை உணவுகள் சிறப்பு என்றாலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு அது குடலில் உபாதைகளை உண்டுசெய்கிறது. எனவே அரிசி உணவுகள், காய்கறிகள், ஓட்ஸ், முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம். நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகள், போரிட்ஜுகள், கஞ்சி, பிஸ்கட்டுகள், ரஸ்குகள், பிரெட் எடுத்துக்கலாம். பெரியவர்கள் இருக்கும் வீடுகளிலும் இந்த வகை உணவுகளை வாங்கி வைக்கணும். ஏனெனில் ஒரே வேளையில் அதிகம் உண்ண முடியாது. சிறிது சிறிதாக அவ்வப்போது பசிக்கும்போது எடுத்துக் கொள்வார்கள். பழச்சாறுகள், சூப் வகைகள் மற்றும் அசல் பழத்தில் செய்யப்பட்ட மில்க் ஷேக்குகள் கொடுக்கலாம். அது அவர்கள் இழந்த எனர்ஜியை ஈடுகட்டும். உணவில் பழ வகைகள், குறிப்பாகத் தினமும் வாழைப்பழம் இருப்பது நல்லது. மலச்சிக்கலால் அவதியுறும் பெண்கள் அநேகம். அதைப் பழ உணவு நீக்குகிறது.

70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குக் கண் புரை நோய்கள், காது கேட்பதில் மந்தம், பல் விழுதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். நாம் அலுத்துச் சலித்துக் கொள்ளாமல் அவர்கள் கேட்பதை முடிந்த அளவு புன்னகையோடு செய்து கொடுக்கலாம். கண் சம்பந்தமான நோய்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதுகூட சிலருக்கு முடியாது. கண்ணில் நீர் வடிதல், அரிப்பு, சொத்தைப் பல், உணவு உண்ணவோ விழுங்கவோ முடியாமல் அவதி இருக்கலாம். எப்போதும் ஏதாவது அவர்கள் தங்கள் உடல் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். முடிந்த வரை டாக்டரிடம் காண்பித்து அவர்களின் உடல் உபாதைகளைக் களைவது மட்டுமல்ல. தினமும் சில மணித்துளிகளாவது அவர்கள் அருகில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருத்தல் நலம். அதுவே அவர்களின் பாதி நோய்களைப் போக்கி விடும். நேரம் கிடைப்பவர்கள் தங்கள் அம்மா அல்லது பாட்டிக்காகப் புத்தகங்களை வாசித்துக் காண்பிக்கலாம். அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது குடும்ப உறவுகள் சூழும் விழாக்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும். எல்லாருடனும் பழங்கதைகள் பேசி தங்கள் வயதொத்தவர்களைப் பார்த்து அவர்கள் உற்சாகமடைவதே உடலுக்கு டானிக் போலத்தான்.

இந்தக் காலகட்டத்தில் பெரியோர்களும் சின்ன சின்ன நடைப் பயிற்சி (அதிகம் செய்தால் மூட்டு சவ்வு விலகிப் போகும் அபாயமும் இருக்கிறது) செய்ய வேண்டும். குதிகால் வலி வராமல் இருக்க ரப்பர் செருப்புகள் அணிவது நலம். குடலுக்கு ஒத்துக்கொள்ளும் மென்மையாக வேகவைக்கப்பட்ட உணவுகள் எடுத்துக்கொள்வதும் அடிக்கடி வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவதும் செரிமானத்தை சீராக்கும். ரத்த அழுத்தம், இனிப்பு நீர், தைராய்டு போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கொடுக்கப்படும் மருந்துகளை வேளை தவறாமல் உண்ண வேண்டும். பொதுவாக எங்கேயும் நடக்கும்போதும் எச்சரிக்கையாகப் பார்த்து நடக்க வேண்டும். இளம் பருவத்தில் எலும்பு முறிவேற்பட்டால் சீக்கிரம் இணைந்து விடும்.. வயதான காலத்தில் எலும்புகள் இணைவது ரொம்ப காலம் எடுத்துக் கொள்ளும்.

பெரியவர்களின் இன்னொரு மனப்பான்மை, எதையும் தங்களைக் கேட்டுச் செய்ய வேண்டும் என்பது. அதையும் முடிந்தவரைக் கடைப்பிடித்தல் நலம். நல்ல அம்மாதான் ஒரு நல்ல மருமகளாகவும் இருக்கிறார். இன்னொரு குடும்பத்துப் பெண்ணைத் தன் அன்பாலே நல்ல மருமகளாகவும் ஆக்குகிறார். ஒவ்வொரு செயலையும் பெரியவர்களும் தங்களுக்குப் பிடித்த விதத்திலேயே சின்னவர்கள் கடைப்பிடிக்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற தங்கள் மனோபாவத்தையும் மாற்றிக்கொண்டால் நல்லது.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon