மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: நேற்று சண்டை... இன்று சமாதானம்!

டிஜிட்டல் திண்ணை: நேற்று சண்டை... இன்று சமாதானம்!

எடப்பாடி கொடுத்த விருந்து

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு இரண்டாவது நாளாக நடந்துவருகிறது. நேற்று அதிகாரிகளைப் பொத்தாம் பொதுவாக வறுத்தெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதை நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் விலாவரியாக சொல்லியிருந்தோம். இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டும் தனியாகச் சந்தித்தார் எடப்பாடி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருக்கிறவங்க சரியாக செயல்படுவதே இல்லைன்னு எனக்குத் தொடர்ந்து புகார் வந்துட்டே இருக்கு. அதனால்தான் நேற்று பொதுவாகப் பேசினேன். உங்க எல்லோருடைய ஒத்துழைப்பும்எங்களுக்கும் தேவை. நாம எல்லோரும் இணைந்து செயல்பட்டால்தான் ஆட்சியைச் சிறப்பாக நடத்த முடியும். நாங்க என்ன திட்டம் போட்டாலும் அதை செயல்படுத்தப்போறது நீங்கதான். அதனால், ஆட்சிக்கு நல்ல பெயர் வந்தாலும் சரி, கெட்ட பெயர் வந்தாலும் சரி அதுல சரி சமமான பொறுப்பு உங்களுக்கும் இருக்கு. எந்தத் துறையை சேர்ந்த அதிகாரியாக இருந்தாலும் எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனே உங்க துறை அமைச்சர்களுடன் பேசுங்க. அதுல எதுவும் சிக்கல் இருந்தால்என்னிடம் நேரடியாகவே பேசுங்க...’ என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் முதல்வர்.

சில அதிகாரிகள் நேரடியாகவே சில புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள். ‘அமைச்சர்கள் யாராவது எங்களிடம் பேசினால்கூடப் பரவாயில்லை… ஒன்றியம், வட்டம்னு ஆளாளுக்கு போன் பண்ணி அதிகாரம் பண்றாங்க. அந்த வருத்தத்தில்தான் சிலர் இருந்தோம்...’ என்று ஒரு அதிகாரி நேரடியாகவே சொல்லிவிட்டாராம். அதற்கு, ‘இனி அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நான் கவனமாகப் பார்த்துக்குறேன். அமைச்சர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன். எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்குத் தேவையில்லாத அழுத்தம் இருக்காது’ என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.

காலை 9 மணிக்கு அதிகாரிகள் கூட்டத்துக்குப் போன எடப்பாடியும் அமைச்சர்களும் மதிய உணவுக்கு வெளியே வரவே இல்லை. காலை 11 மணியளவில் திடீரென்று முதல்வர் தனது உதவியாளரை அழைத்து, ‘இன்று மதிய உணவுஎல்லோருக்கும் இங்கேயே ஏற்பாடு செய்யச் சொல்லுங்க. ஆபீஸர்ஸோடு சேர்ந்து நாங்களும் சாப்பிடுறோம்’ என்று சொல்லிவிட்டாராம். அதன்படியே இன்று மதிய உணவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் சேர்ந்துமுதல்வரும் அமைச்சர்களும் சேர்ந்து சாப்பிட்டார்களாம். முதல்வர் அதிகாரிகளைப் பார்த்து, இதை சாப்பிடுங்க… அதைச் சாப்பிடுங்க... என்று சொல்லியும் உபசரித்தாராம். ‘நேற்று திட்டி தீர்த்துட்டு இன்று சமாதானப்படுத்த விருந்து வைக்கிறாரா?’என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள் சில அதிகார்கள்.

ஒட்டுமொத்தமாகத் திட்டிவிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் தனித்தனியாகக் கூப்பிட்டு சமாதானப்படுத்துவதுதான் எடப்பாடியின் திட்டம் என்கிறார்கள் சிலர். நாளை ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கும்போதுதான்அவர்களிடம் அவர் என்னப் பேசப்போகிறார் என்பது தெரியும் என்றும் சொல்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக். “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தொடர்ந்து பலரும் ஆஜராகித் தங்களது விளக்கத்தை அளித்துவருகிறார்கள். இன்று ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கண்ணன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில், போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுபோன சமயத்தில், தானும் உடன்சென்றதாக அவர் குறிப்பிட்டிருக்கிறாரம். அது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவை மருத்துவமனையில் அட்மிட் ஆன 10 நாட்களுக்குப் பிறகு தான் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கண்ணன் இன்னும் சில விஷயங்களையும் வாக்குமூலத்தில் சொன்னாராம். அது அத்தனையும் சசிகலாவின் அருமை பெருமைகளைச் சொல்வதாகவே இருந்ததாம். ‘அம்மா மயங்கி விழுந்ததும், சின்னம்மாதான் அழுது துடிச்சாங்க. அவங்களைசமாதானப்படுத்தவே எங்களுக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு...’ என்றும் சொல்லியிருக்கிறார். டிரைவர் கண்ணன் இப்போது கார்டனில் இல்லை என்றாலும், விவேக் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு நபராகத்தான் இருக்கிறாராம். அதன்பிறகு எப்படி அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் சிலர் கேட்கிறார்கள்” என்பது அந்த ஸ்டேட்டஸ்.

“நியாயம்தானே!” என கமெண்ட் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 6 மா 2018

அடுத்ததுchevronRight icon