மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

வகுப்புவாதக் கலவரம்: அவசரநிலைப் பிரகடனம்!

வகுப்புவாதக் கலவரம்: அவசரநிலைப் பிரகடனம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரத்தையடுத்து, 10 நாட்களுக்கு அந்நாட்டு அரசு அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது.

இலங்கையில் கடந்த ஓராண்டாக முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுவந்தது. மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் புத்தக் கோயில்கள், நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் புத்த மதத்தினர் தரப்பில் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

கடந்த வாரமே இரு சமூகத்தினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய மாகாணமான கண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4) இஸ்லாமிய - புத்த குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம் குழுவினரால் புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 11 கடைகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன.

இதையடுத்து, "வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க 10 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது" என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயசிறீ ஜெயசேகரா கூறினார். ஃபேஸ்புக் மூலம் வன்முறையைத் தூண்டிவிடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அவசரகால ஆணையைப் பற்றிய விவரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை, தெற்காசியத் தீவில் வாழும் மக்களுக்கு இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கலவரத்துக்கான காரணம்

இரு மதத்தினருக்கிடையில் ஏற்பட்ட தாக்குதலில் 41 வயதுடைய சிங்களவர் ஒருவர் ஞாயிறு (மார்ச் 4) இரவு உயிரிழந்தையடுத்து, இந்தத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சிங்களவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தெல்தெனி என்ற பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலரே அவரை தாக்கியதாகக் கூறி, முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்களைத் தீயிட்டு எரித்தனர்.

இதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான போலீசார் ஒழுங்கை நிலைநாட்டவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும் பதற்றமான மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். முஸ்லிம் வீடுகளும் வணிக வளாகங்களும் மசூதிகளும் தீக்கிரையாகியுள்ளன.

இலங்கையின் 21 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் சிங்களவர்கள், புத்த மதத்தினர். முஸ்லிம்கள் வெறும் 10 சதவிகிதம்தான். மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பரில் தென்பகுதித் தீவில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்தன.

2014 ஜூன் மாதம் முஸ்லிம், புத்த மதத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுக் காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போர், தமிழ் எழுச்சியாளர்களின் தோல்வியுடன் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கலவரச் சூழல் நிலவினாலும் திட்டமிட்டபடி இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரநிலை காரணமாக கிரிக்கெட் போட்டி பாதிக்காது. கொழும்புவில் இலங்கை - இந்தியா இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon