மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஜான்வி: ஒரே ஒரு கோரிக்கை!

ஜான்வி: ஒரே ஒரு கோரிக்கை!

அம்மா இல்லாத முதல் பிறந்தநாளை இன்று (06.03.2018) கொண்டாடுகிறார் ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர். 1997இல் பிறந்த இவருக்கு, இன்றுடன் 21 வயதாகிறது. தன் மகளை எப்படியாவது திரையுலகில் அறிமுகப்படுத்தி பெரிய நடிகையாக்கிவிட வேண்டும் என்று முயற்சித்த ஸ்ரீதேவி, ஜான்வி கபூரின் 21ஆவது பிறந்தநாளில் அவர் அருகில் இல்லாதது

ஜான்விக்கு மிகப்பெரிய சோகம்தான். ஆனாலும் தன் அம்மா இருந்தால், இந்தப் பிறந்தநாள் எப்படி கொண்டாடப்பட்டிருக்குமோ அதேபோல கொண்டாடுவதென முடிவெடுத்திருக்கிறார் ஜான்வி.

ஸ்ரீதேவி இருந்தவரையிலும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பிறந்தநாளுக்கும் அநாதை இல்லங்களுக்குச் சென்று உணவும், உடையும் கொடுப்பதுதான் வழக்கம். அதுபோலவே, மும்பையிலுள்ள பல அநாதை இல்லங்களுக்கு ஜான்வி கபூரின் பேரில் உணவும், உடைகளும் சென்று சேர்ந்திருக்கின்றன. ஜான்வியும் ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் நேரம் செலவழித்துவிட்டு வந்திருக்கிறார். பிறந்தநாளன்று சந்திக்கக் விருப்பப்பட்ட யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஸ்ரீதேவி அருகில் இல்லாதபோதும் இவ்வளவு தைரியத்துடன் செயல்படும் ஜான்வியை எனக்குத் தெரிந்த வலிமையான சிறுமி ஒருத்தி இன்றிலிருந்து பெண்ணாக மாறியிருக்கிறாள் என்று இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சோனம் கபூர்.

வலிகளை எவ்வளவுதான் உள்ளே மறைத்தாலும், அதிலிருந்து தான் உணர்ந்த உண்மையை மற்றவர்களுக்குச் சொல்லும் விதத்தில் ஒரு கருத்தை ஜான்வி பதிவு செய்திருக்கிறார். அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் “என் பிறந்தநாளன்று உங்களிடம் கேட்கும் கோரிக்கை ஒன்று தான். உங்களது பெற்றோர்களின் மீது அன்பு செலுத்தி, அந்த அன்பை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். என் அம்மா எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் குடும்பத்தின் மீதான அன்பு அளவிடமுடியாதது. தனது இறப்பிலும் இந்த உலகத்துக்கு அவரால் ஏதாவது கிடைத்தது என்று தெரிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார். எனவே, அவரைப் போல எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி, எந்த வழியிலும் யாருக்கும் கசப்பான அனுபவங்களைக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன்” என்றவாறு அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் முடிவடைந்திருக்கிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon