மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018

பியூட்டி ப்ரியா: இளமை என்றென்றும் இனிமை!

பியூட்டி ப்ரியா: இளமை என்றென்றும் இனிமை!

இன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். இப்படிக் காட்சியளிப்பதற்குச் சரும பராமரிப்புகளும் உண்ணும் உணவுகளும் பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

அதிலும் தற்போது பெரும்பாலானோர் ‘ஜங்க்’ உணவுகளை அதிகம் எடுத்து வருவதால், உடலில் பல பிரச்சினைகளைக் கொண்டுவருவதுடன், சருமத்தின் அழகையும் பாதிக்கிறது.

இதனால் ஆண்கள்தான் விரைவில் முதுமையானவர்கள் போன்று காணப்படுகின்றனர். இதற்கு அவர்கள் தங்களின் சருமத்துக்கு போதிய பராமரிப்புகளைக் கொடுக்காததுதான் காரணம்.

அக்காலத்தில் எல்லாம் ஆண்கள் தங்கள் சருமத்துக்கு எவ்வித பராமரிப்புகளும் கொடுக்காமலேயே அழகாகவும் இளமையுடனும் காட்சியளித்தனர். ஆனால், இன்றைய மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் ஆண்கள் தவறாமல் தங்களின் சருமத்தைப் பராமரித்தால்தான் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க முடியும்.

நவரா அரிசி, பாதாமை ஊறவைத்து, பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்க வேண்டும். கொரகொரப்பான இந்தக் கலவையை முகம், கழுத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக, மூக்கு ஓரங்கள், முன் நெற்றி, இதழ்களின்கீழே அழுத்தித் தேய்க்க, சின்னச்சின்ன குருத்துகள் நீங்கும்.

கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகள் நீங்கும். இறந்த செல்கள், பருக்களின் மிச்சங்கள் நீங்கிவிடும். சருமம் மிருதுவாக பளிச் என மாறும்.

கண்களுக்குத் தெரியாத, செதில் செதிலான இறந்த செல்களை நீக்க உதவுவது ஸ்க்ரப். இந்த கலவையைத் தயாரித்து, அதை முகம், கழுத்து, கை கால்களில் பூசி, மென்மையாக மசாஜ் செய்வதே “ஸ்க்ரப்” என்ற சிகிச்சை.

ஆரஞ்சு

ஆரஞ்சு ஜூஸில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து, பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் சி சத்தானது பாதிப்படைந்த செல்களைப் புதுப்பித்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். அதிலும் இந்த முறையை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செய்து வர வேண்டும்.

தக்காளி

உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வருவதுடன், அதன் சாற்றைத் தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால், அது சருமத்துக்குத் தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துகளை வழங்கி, சருமத்தைப் பொலிவோடும் அழகாகவும் வைத்துக்கொள்ளும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடங்கள் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்

கற்றாழை

கற்றாழை ஜெல்லைத் தினமும் முகத்துக்குத் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவினால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமமானது இளமையுடன் காட்சியளிக்கும்.

ஃப்ரூட் ஃபேஷியல்

பாதி ஆப்பிளை நறுக்கி, அத்துடன் 5 ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்துக்குத் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முதுமை கோடுகள் மறைந்து, முகம் சுத்தமாக அழகாகக் காணப்படும்.

தேன் ஃபேஷியல்

வறட்சியுடனும் மென்மையிழந்தும் இருக்கும் சருமத்துக்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்குத் தேனை சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon