மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

வலுக்கும் எதிர்ப்பு: பின்வாங்கிய எச்.ராஜா

வலுக்கும் எதிர்ப்பு: பின்வாங்கிய எச்.ராஜா

பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் தனது பதிவைச் சமூக வலைதளத்திலிருந்து நீக்கியுள்ளார்.

திரிபுராவின் பிலோனியா நகரில் இருந்த ரஷ்ய முன்னாள் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விளாடிமிர் லெனினின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் நேற்று (மார்ச் 5) ஜெ.பி.சி எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். லெனின் சிலை அகற்றப்படும்பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், “தந்தை பெரியாரின் சிலையைத் தொட்டு பார்க்கும் அளவுக்குக்கூட யாருக்கும் தகுதி கிடையாது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் இது போன்ற கருத்துகளை எச்.ராஜா தொடர்ந்து கூறிவருகிறார். அவரைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

ரகசியமாகப் போய், ராத்திரி நேரத்தில் களவாணிப் பயல் போல் பெரியார் சிலையை அகற்றுவது கெட்டிக்காரத்தனம் அல்ல. நாள், நேரம் குறித்துவிட்டு வாருங்கள். என் தலைமையில் தடுக்கும் படை வரும். உங்கள் கை, கால் துண்டு துண்டாகப் போகும். அருவாள் பிடித்த கைகள் இது.

டிடிவி தினகரன் எம்எல்ஏ:

கம்யூனிசம் என்பது உலகத்துக்குத் தேவையான ஒரு கொள்கை. இந்தியாவில் கம்யூனிசம் இருக்க வேண்டும். லெனின் சிலையை அகற்றுவதன் மூலம் கம்யூனிசத்தை அழித்துவிட முடியுமா? சமூக நீதிப் புரட்சி செய்தவர் பெரியார். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சமூக, பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர் பெரியார். ராஜா ஏன் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு சுய கட்டுப்பாடு இல்லை. இந்தியாவுக்கே சுதந்திரம் பெற்றுதந்தது போன்று அவர் பேசுகிறார். பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் என்னவாகும்? கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்க்கலாம் என்று அவர் பார்க்கிறார். அவரது பேச்சை பாஜகவே ஏற்குமா என்பது தெரியவில்லை. தமிழகத்தில்தான் இதுவரை கலவரம் இல்லாமல் உள்ளது. அதை ராஜா தூண்டிவிடப் பார்க்கிறார். அவருக்கு நாக்கில் சனி உள்ளது.”

பாமக நிறுவனர் ராமதாஸ்:

விநாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம்தான் எச்.ராஜாவின் முகநூல் பதிவாகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளைத் திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அதிமுக இடம் கொடுத்ததால் எச்.ராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய எச்.ராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும், சட்டம் ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசிவரும் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:

”எச்.ராஜாவின் பேச்சு அவரது ஆணவத்தின் உச்சத்தை உணர்த்துகிறது. இது பெரியார் மண். இங்கு மதவாத சக்திகள், பிரிவினைவாத சக்திகள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. பெரியார் சிலையைத் தொட ராஜா மட்டுமல்ல, அவரின் முப்பாட்டன் வந்தாலும் முடியாது.”

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்:

”லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனங்கள். லெனினுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு எனக் கூறுவது அறியாமையின் வெளிப்பாடு. பெரியாரின் சிலையை நாளைக்கு உடைப்போம் என்கிறார். வீராதி வீரராக இருந்தால் இன்றே உடைக்கட்டும். பெரியாரின் சிலையில் கைவைத்துப் பார்க்கட்டும். அதன் பின் என்ன ஆகிறது என்று. எச்.ராஜா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி:

”எச்.ராஜா எந்த இனத்திற்காகப் பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தைச் சார்ந்தவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.”

கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர்:

"திரிபுராவில் மாமேதை தோழர் லெனின் சிலையை உடைத்து அகற்றியது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைப்போம் என்ற பாஜகவின் தேசியச் செயலாளர் திரு.எச்.ராஜாவின் வன்முறையைத் தூண்டும் பேச்சு கண்டனத்துக்குரியது. அமைதியைச் சீர்குலைத்து வன்முறையைத் தூண்டும் பேச்சுக்குத் தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து எச்.ராஜா வைக் கைது செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.”

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்:

”தமிழ்நாட்டில் உள்ள பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலையை ‘ தகர்ப்பதாகப் பகிரங்கமாக’ அறிவிக்கிறார். இவரது வன்மம் நிறைந்த, மோதல் உருவாக்கி, பகை வளர்க்கும் வெறிப் பேச்சு, தமிழ்நாட்டை ‘கலவரபூமியாக்கும் தீயநோக்கம்’ கொண்டது. பொது அமைதியைச் சீர்குலைத்துவரும் இந்துத்துவா பயங்கரவாதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் மௌன சாட்சியாக தமிழ்நாடு அரசு செயலற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.”

ஜவாஹிருல்லா, மமக:

”நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து, வெறுப்பை உமிழும் பயங்கரவாதப் பிரச்சாரத்தைச் செய்து, வன்முறைக்கும் மோதலுக்கும் தொடர்ந்து வழிவகுக்கும் எச். ராஜாவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”

பின்வாங்கிய பாஜக

தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் எச்.ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், எச்.ராஜாவின் கருத்து அவரது சொந்தக் கருத்து எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், “தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச்.ராஜா தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இது பாஜகவின் கொள்கை முடிவு கிடையாது, கருத்தும் கிடையாது. அவர் ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் என்றுதான் அதனை எடுத்துக்கொள்ள முடியும். எச்.ராஜாவின் கருத்து பாஜகவின் அதிகாரபூர்வ கருத்து அல்ல. எனவே இதுகுறித்து என்னால் பதில் கூற இயலாது” என்று மழுப்பும் விதமாக பதிலளித்துள்ளார். இதனிடையே, கடும் எதிர்ப்பு காரணமாக எச்.ராஜாவும் தனது பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon