மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

ஒருதலைக் காதல்: ஆசிட் வீச்சு!

ஒருதலைக் காதல்:   ஆசிட் வீச்சு!

தன் காதலை ஏற்க மறுத்ததால் பெண் ஒருவர் மீது இளைஞன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார் (வயது 21). இவர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் சில மாதங்களாக பெண் ஒருவருடன் நட்பிலிருந்துள்ளார். அந்தப் பெண்ணை ஒருதலையாக சோனு காதலித்துவந்துள்ளார். தன் காதலை அந்தப் பெண்ணிடம் இவர் சொன்னபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சோனு நேற்று (மார்ச் 5) மாலை, பாட்னாவில் அந்தப் பெண் தனது மாமாவுடன் கோவிலுக்குச் சென்று திரும்பும்பொழுது மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து வழிமறுத்துள்ளார். இவரைப் பார்த்து நின்ற அந்தப் பெண்ணின் மீது சோனு ஆசிட்டை வீசியுள்ளார். தடுக்க முயன்ற அவரது மாமா மீதும் ஆசிட் சிதறியுள்ளது. இருவரின் அலறலைக் கேட்டு கூட்டம் கூடத் துவங்கியதும், சோனு தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார். பின்னர் அவர்கள் இருவரும் கார்டனி பாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சோனுவை இன்று (மார்ச் 6) காலை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாட்னாவைச் சேர்ந்த காவல் துறை கண்காணிப்பாளர் லாளன் மோகன் பிரசாத், "அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்துவந்த சோனு, தன் காதலை அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆசிட் வீச முடிவு செய்து, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை ஆசிட் வீசியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலைச் சேர்ந்த வினோதினியும் சென்னையைச் சேர்ந்த வித்யாவும் ஒருதலைக் காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்தப் பரிசோதனை மையம் ஒன்றில் வேலைபார்த்த யமுனா என்ற பெண்மீது ஆசிட் வீசித் தீவைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யமுனா பிப்ரவரி 24ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon