மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மம்தா அழைப்பு: ஸ்டாலின் பதில்!

மம்தா அழைப்பு: ஸ்டாலின் பதில்!

மூன்றாவது அணி குறித்த மம்தாவின் அழைப்புக்கு, 'தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. உரிய நேரத்தில் எங்களுடைய உயர் மட்டக் குழு கூடி முடிவெடுத்து தெரிவிக்கிறோம்' என்று கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அணி அவசியமானது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியிருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்றாவது அணி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசியதாகச் செய்தி வெளியானது. தற்போது மு.க.ஸ்டாலின் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 6) செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், "மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார். பேசும்போது மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் கூறினார். அதற்கு நான், 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. எனவே தேர்தல் வரக்கூடிய நேரத்தில் எங்களுடைய உயர் மட்டக் குழு கூடி ஆலோசித்து எங்களுடைய முடிவைத் தெரிவிக்கிறோம்' என்று கூறினேன்" என்றார்.

மூன்றாவது அணி என்பது தேவையா என்ற கேள்விக்கு "ஏற்கனவே திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் மம்தா என்னிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நானும் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. உரிய நேரத்தில் ஆலோசித்துக் கூறுவோம்" என்று தெரிவித்தார்.

நேற்று எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் உருவாகியுள்ளது. அதனை நிரப்புவேன் என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு,“வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தமிழக மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மாற்று ஆட்சியாக அடுத்து வரப்போவது திமுகதான். மக்களும் அதற்குத் தயாராக உள்ளார்கள்" என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைத்துள்ளதே என்ற கேள்விக்கு, “நேற்று மாலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னிடம் தொலைபேசியில் பேசினார். 'வரும் 8ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டுவதாக நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால் அதற்குள் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த நான்கு மாநில அதிகாரிகளையும் மத்திய அரசு அழைத்துள்ளது. எனவே 9ஆம் தேதி அந்த கூட்டம் முடிந்த பிறகு சட்டமன்றத்தைக் கூட்டலாமா' என்று கேட்டார். அதற்கு நான், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இத்துடன் 3 வார அவகாசம் முடிந்துவிட்டது. மீதம் மூன்று வாரம்தான் உள்ளது. எனவே இது மத்திய அரசின் ஏமாற்று நாடகம்தான் ' என்று கூறினேன். ‘9ஆம் தேதி எடுக்கும் முடிவைப் பார்த்துக்கொண்டு சட்டமன்றத்தைக் கூட்டலாம்’ என்று பன்னீர்செல்வம் கூறினார். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன்" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon