மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்!

25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்!

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் பாதியாகக் குறைந்துள்ளன. இது உலக அளவில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 47 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குழந்தைத் திருமணத்தில் ஏற்பட்டுள்ள சரிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இத்தகைய திருமணத்தை ஒழிக்க அதிக நடவடிக்கைகள் தேவை.

இது குறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் பத்தாண்டுகளில் 25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தெற்காசியாவில் அதிக அளவில் குறைந்துள்ளன. இதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 12 மில்லியன் சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெறுகிறது. இருப்பினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என யுனிசெப் சிறுவர் பாதுகாப்புத் தலைவர் ஜவியர் அகுய்லர் கூறினார்.

குழந்தைத் திருமணத்தால் சுகாதாரம், கல்வி போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல், வறுமையானது தலைமுறைகளாகத் தொடரும் நிலையும் ஏற்படும் என அஞ்சு மல்ஹோத்ரா யுனிசெப் அமைப்பின் பாலின ஆலோசகர் கூறினார்.

உலக அளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடக்கிறது. குழந்தைத் திருமணத்தை 2030ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2006 முதல் 2016ஆம் ஆண்டுகளில், 20 முதல் 24 வயதுள்ள பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார்களா என்று கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் யுனிசெப் அமைப்பு இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

திருமணம் செய்யச் சட்டப்படி, ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 15 வயதுக்குக் கீழுள்ள மனைவியை கட்டாயப்படுத்தி உறவுகொள்வது பாலியல் பாலத்காரம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைத் திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்களுக்கு 1 லட்சம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

சட்டத்தை மீறிச் சில இடங்களில் குழந்தைத் திருமணம் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. தெலங்கானாவில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. பல இடங்களில் மறைமுகமாக நடந்துவருகின்றன.

பெங்களூரு சட்ட மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஜயன கோதரி, குழந்தைத் திருமணத்தைச் செல்லாது என அரசு அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். மேலும், குழந்தைத் திருமணத்தை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon