மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தருவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கு மார்ச் 6ஆம் தேதி (இன்று) வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இந்திராணி அடைக்கப்பட்டுள்ள மும்பை பைகுலா சிறைக்கு கார்த்தியை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் இருவரிடமும் கூட்டாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் 5 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தியை சிபிஐ அதிகாரிகள் இன்று (மார்ச் 6) ஆஜர்படுத்தினர். கார்த்திக்கான காவலை நீட்டிக்கக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேவேளையில் கார்த்தி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கார்த்தியின் பெற்றோர் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

சிபிஐ சார்பில் வாதிட்ட அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்திராணி அளித்த 164 வாக்குமூலங்கள் தொடர்பானது மட்டுமல்ல எங்கள் விசாரணை. எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விசாரணையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அது தொடர்பாக வெளிப்படையாகக் கூற முடியாது. மொபைலைப் பறிமுதல் செய்ய, பின்னர் அதன் பாஸ்வேர்டை நான் கூற மாட்டேன் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறினாலும் அது விசாரணைக்கு ஒத்துழைக்காததுதான்” என்று தெரிவித்தார்.

கார்த்தி தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, “கார்த்தியைக் காவலில் வைத்திருக்க சிபிஐ மேற்கொள்ளும் சூழ்ச்சி இது. கார்த்தியைக் காவலில் வைத்திருக்க சிபிஐ தரப்பில் நாளை மேலும் சில காரணங்களும் கூறப்படும். கார்த்தி ஒன்றும் தீவிரவாதி அல்ல. காவலில் எடுக்காமல் அவரிடம் விசாரணை நடத்த முடியாதா? அவர் விசாரணைக்குத் தயாராகவே உள்ளார். ஆனால் சிபிஐ விரும்பும் வாக்குமூலத்தை கார்த்தி அளிக்கமாட்டார்” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுனில் ராணா, கார்த்தியை மேலும் 3 நாட்களுக்குக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் மறுப்பு

இதற்கிடையே தனக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் எந்த வகையிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இதற்கு முன்பும் அவ்வாறே செயல்பட்டுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையினை ஏற்று இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon