மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

திருமங்கலம் நகைக் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை!

திருமங்கலம்  நகைக் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை கொளத்தூரைத் தொடர்ந்து தற்போது திருமங்கலத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை திருமங்கலம் நேரு நகர் 2ஆவது அவென்யூவில் ஏ.கே.எஸ். ஜூவல்லரி என்ற பெயரில் 3 மாடிகளைக் கொண்ட நகைக் கடை செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார்.

கடையின் முதல் தளத்தில் வெள்ளிப் பொருட்களும், இரண்டாவது மாடியில் ராசிக்கல் பதித்த நகைகளும், 3ஆவது மாடியில் கடைகளுக்குத் தேவையான பொருட்களையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்க, வெள்ளி நகைகளையும், ரூ.7 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வழக்கம்போல் கடையைத் திறந்த உரிமையாளர் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அருகில் உள்ள கட்டடத்தின் வழியாக ஏறி நகைக் கடையின் மாடிக்குச் சென்று அங்கிருந்த பெரிய இரும்பு கிரில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள் , மோப்ப நாய் உதவியுடன் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது என்று காவல் துறையினர், கூறியுள்ளனர். நகைக் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபோன்று சில மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் மஹாலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடையில் 3 ½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூர் கொள்ளைச் சம்பவ பரபரப்பு சற்று ஓய்ந்திருந்த நிலையில் திருமங்கலத்தில் மேலும் ஒரு நகைக் கடையில் அதே பாணியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது காவல் துறைக்குச் சவாலாக அமைந்துள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon