மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்!

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று (மார்ச் 6) நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நேற்று முதல் அதிமுக உறுப்பினர்கள் தார்மீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கக் கூடாது. காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை எந்த ஆட்சி மத்தியில் வந்தாலும் தமிழகத்துக்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் காவிரிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. எனவே இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். அதன் பிறகு அவர்களாகவே முன்வந்து உங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனரே என்ற கேள்விக்கு, "இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுபூர்வமான ஒரு பிரச்னை. ஒவ்வொரு உறுப்பினரும் உணர்வுகளின் அடிப்படையில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அழைப்பு கொடுத்துத்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது. காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை ஒன்றுபட்டுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த வரும் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு காவிரி சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இது மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப்போடும் முயற்சி என்று குற்றம் சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, "நாங்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறோம். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதிகாரிகளை எதற்கு அழைத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த ஆலோசனைகளெல்லாம் தேவை கிடையாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மற்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன" என்றார்.

மேலும் அவர் "அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு இவ்வாறு செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள். அவர்களுக்குப் பணி செய்ய வேண்டியதே எங்களுடைய கடமை. எனவே எங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "நேற்றுவரை அவையில் மட்டும்தான் பேசினோம். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்த அவர், எங்களிடம் இரு அவைகளிலும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுடைய போராட்டம் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் ஒருநாள் கூட நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்" என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon