மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

அமைச்சர்களை நம்பி காசு கொடுக்காதீங்க!: புகழேந்தி

அமைச்சர்களை நம்பி காசு கொடுக்காதீங்க!: புகழேந்தி

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் பேசுவதற்காகவே, தினமும் ஒரு மணி நேரம் ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி. மேலும், விரைவில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சி பறிபோகவிருப்பதால், ஒப்பந்ததாரர்கள் யாரும் தமிழக அமைச்சர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் ஆதரவாளராக இருந்து வருபவர் புகழேந்தி. கர்நாடகா அதிமுகவின் பொறுப்பாளராக இருந்துவந்த இவர், சில மாதங்களுக்கு முன்பாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் மயிலாடுதுறையில் நடந்த கூட்டமொன்றில் நேற்று (மார்ச் 5) அவர் கலந்துகொண்டார். அதன்பின், இன்று பெங்களூரு திரும்பும் வழியில் புதுச்சேரி விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

”எடுக்கின்ற திட்டங்களை எல்லாம் வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மணல் அள்ளுவதற்கு உதவி செய்யுமாறு அவர்களிடம் கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், பல இடங்களில் கலெக்டர்கள் அதற்கு அனுமதி மறுப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வருகிறது. அதனால், தமிழகத்திலுள்ள காண்டிராக்டர்களுக்காகச் சொல்கிறேன். இந்த அமைச்சர்களை நம்பி, காசு எதுவும் கொடுத்துவிடாதீர்கள். ஆட்சி பறிபோவதால், இவர்கள் எல்லாம் இனி இருக்கமாட்டார்கள். போஸ்ட்டிங் போடுறேன், மணல் குவாரி தர்றேன் என்று அமைச்சர்கள் சொல்லி, யாராவது பணம் கொடுப்பார்களேயானால், அவர்கள் தெருவில் நிற்கப் போகிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ளுமாறு ரஜினிகாந்த் சொன்னது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், தமிழக அமைச்சர்கள் மோடியை மகிழ்ச்சியடைய வைப்பதற்காகத் தினமும் ஒரு மணி நேரம் ஹிந்தி கற்றுக்கொள்வதாகக் கூறினார். ”தற்போது, தமிழக அமைச்சர்கள் ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டில் வேறு எந்த வேலையும் இல்லை. அதிமுகவினருக்கு இடையே பஞ்சாயத்து செய்வதும், அந்தக் கட்சியை அழிப்பதையுமே வேலையாகக் கொண்டிருக்கிறார் அவர்.

இந்த பிரதமர், காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்குச் சாதகமாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். இவர் தமிழகத்தைச் சார்ந்த எவரையும் சந்திக்க மாட்டார். தமிழிசை மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் இவர்களை அழைத்துச் செல்லட்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதால் மட்டுமே காவிரி பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நோக்கிக் கேள்வியெழுப்பினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தையும் விமர்சித்தார். “அனைத்து கட்சி கூட்டத்திற்குச் சென்றால் எல்லாம் முடிந்துவிடுமா? முதலமைச்சருடன் இரவும் பகலும் பேசினால் தீர்வு கிடைத்துவிடுமா? எந்த அடிப்படையில் இதனை நடத்துகிறார்கள் என்றே புரியவில்லை. இந்த முதலமைச்சர் ஏமாற்றுகிறார். இது ஒரு நாடகம்” என்று தெரிவித்தார் புகழேந்தி.

ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே யார் முன்னே செல்வது என்பதில் போட்டி நடப்பதாகக் கூறிய புகழேந்தி, இதுநாள் வரை எம்ஜிஆரின் எந்தவொரு சிலையையும் படத்தையும் ரஜினிகாந்த் திறந்து வைக்கவில்லை என்றும், அப்துல்கலாம் இறப்புக்கு கமல்ஹாசன் வரவில்லை என்றும் தெரிவித்தார். இவர்கள் இனிமேல் செய்யப்போகும் சாதனை அனைத்தையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

மேலும், தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகும்போது கட்சி தங்கள் வசமாகும் என்றும், தற்போது 70 எம்எல்ஏக்கள் வரை தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon