மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாப்பேட்டை மண்டலப் பகுதியில் தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைத் தடுக்ப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கோப்பைகள், பாலித்தீன் உறைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் உத்தரவின்படி, மாநகரக் குடும்ப நல அலுவலர் பிரபாகரன் தலைமையில், சுகாதாரக் குழுவினர் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். அதில் 12 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கோப்பைகள், பைகள் என மொத்தம் 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

"சேலம் மாநகராட்சியில் குறிப்பிட்ட மைக்ரானுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் சட்டத்திற்கு எதிரான இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மாநகராட்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரபாகரன் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon