மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

ஒற்றை இலக்கத்தில் வாராக் கடன் மீட்பு!

ஒற்றை இலக்கத்தில் வாராக் கடன் மீட்பு!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் வாராக் கடன் வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் செயற்படாச் சொத்து மீட்பு நடவடிக்கைகளில் 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.28,000 கோடியும், 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.22,800 கோடியும், 2014-15ஆம் நிதியாண்டில் ரூ.30,800 கோடியும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்குப்படி வங்கிகளின் செயற்படாச் சொத்து மதிப்பு ரூ.8.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிகளின் செயற்படாச் சொத்து மதிப்பு ரூ.7.11 லட்சம் கோடியாக இருந்தது.

வங்கிகளின் செயற்படாச் சொத்துகளை மீட்பதற்காக லோக் அதலாத்ஸ் மற்றும் கடன் மீட்புத் தீர்ப்பாயம் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் வங்கிகளின் பாதுகாப்பு, மறுகட்டமைப்பு, நிதிச் சொத்துகள் மற்றும் வட்டி பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கிய புதிய சீர்திருத்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் கடன் மீட்புத் தீர்ப்பாயத்தில் ரூ.2,86,000 கோடி அளவுக்கு செயற்படாச் சொத்துகள் பற்றிய புகார்கள் குவிந்தன. ஆனால் வெறுமனே இந்தத் தீர்ப்பாயத்தின் மூலம் ரூ.28,000 கோடி மட்டுமே மீட்க முடிந்தது. லோக் அதலாத்தின் கவனத்திற்குள்ளான பல்வேறு சிக்கல்கள் நீதிமன்றங்களில் வழக்குகளாகி நிலுவையில் உள்ளன. ஆக, கடந்த சில ஆண்டுகளாகவே மொத்த வாராக் கடனில் 4 சதவிகிதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon