மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

திரிபுரா: வெள்ளியன்று அமைச்சரவை பதவியேற்பு!

திரிபுரா: வெள்ளியன்று அமைச்சரவை பதவியேற்பு!

திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திரிபுரா மக்கள் சுதேசி முன்னணி கூட்டணி பெரு வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதலமைச்சராக பிப்லாப் குமார் தேப் மற்றும் துணை முதல்வராக ஜிஷ்ணுதேப் பர்மன் ஆகியோர் வரும் மார்ச் 9ஆம் தேதியன்று பதவியேற்பார்கள்

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று திரிபுரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 5ஆம் தேதியன்று எண்ணப்பட்டது. இதன் முடிவில், தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 43 இடங்களும் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 இடங்களும் கிடைத்தது தெரிய வந்தது. குறிப்பாக, பாஜக 35 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் சுதேசி முன்னணி 8 தொகுதிகளையும் பெற்றது. இதன் மூலமாக, 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு திரிபுராவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 6) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஜூவல் ஓரம் ஆகியோர் தலைமையில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெற்றது. புதிய அமைச்சரவையை முடிவு செய்வதற்கான இந்த கூட்டத்தில், திரிபுரா சுதேசி மக்கள் முன்னணியும் கலந்துகொண்டது. இதன் முடிவில், பிப்லாப் குமார் தேப் முதலமைச்சராகவும், ஜிஷ்ணுதேப் பர்மன் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரிபுரா அமைச்சரவை பதவியேற்பு விழா மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பிப்லாப் குமார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு திரிபுரா மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. நேற்று (மார்ச் 5) மேற்கு மற்றும் வடக்கு திரிபுரா மாவட்டங்களில் பாஜகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் இரு கட்சிகளைச் சேர்ந்த அலுவலகங்களும் சூறையாடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து திரிபுரா ஆளுநர் ததாகதா ராயுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது காவல்துறை. அங்கு துணை ராணுவப்படையும் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று, இம்மாநிலத்திலுள்ள பிலோனியா என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை அகற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு, நாடெங்கும் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon