மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

விவோவின் புதிய மாடல் பயனுள்ளதா?

விவோவின் புதிய மாடல் பயனுள்ளதா?

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ APEX என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனத்தின் மாடல்கள் பெரும்பாலும் இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளும் நிலையில் அதன் புதிய APEX என்ற மாடலானது வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியானது பல்வேறு பயனர்களின் பயன்பாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஒன்றாகி விட்டது. அதற்கென தனியே ஒரு பட்டனை திரைக்கு கீழேயோ அல்லது மொபைலின் பின்புறமோ பல்வேறு நிறுவனங்களும் வடிவமைத்துள்ளன. தொடுதிரைக்குக் கீழே வழங்கப்பட்டு வந்த பட்டனை பின்புறத்திற்கு மாற்றியதன் காரணம், முன்பக்கம் திரையின் அளவை அதிகப்படுத்துவதும், பயனர்கள் மொபைலின் பின்புறம் எளிதில் பிங்கர் பிரிண்ட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தான்.

ஆனால் அதிலும் தற்போது கூடுதல் வசதியாக தொடுதிரையிலேயே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மொபைல் அளவில் 91 சதவிகிதம் திரை அளவைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த APEX மாடலானது 5.99 இன்ச் திரையளவு கொண்டுள்ளது. இதன் பாதி திரை பிங்கர் பிரிண்ட் வசதிக்காக பயன்படுத்தப்படும் எனவும் விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் என்பதால் பயனர்களைக் கவர்ந்துள்ள இந்த மாடல், சிறிது தயக்கத்தையும் கொண்டுள்ளது. சதாரண ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டால் அதன் தொடுதிரையில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அதனைச் சரிசெய்யவே அதிக அளவு செலவிட வேண்டி உள்ளது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட APEX மாடலில் தொடுதிரை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதிகளவில் செலவிட வேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி இந்த புதிய மாடல் 4.3 ஆடியோ ஜேக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.5 ஜேக்களே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த புதுமையான வசதிக்கு ஏற்ப கருவிகள் கிடைக்குமா என்பது போன்ற எண்ணம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதுமையான தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் சிறப்பான ஒன்று என்றாலும், இதன் பயன்பாடு குறித்து மாடல் வெளியாகும் வரை ஏதும் கூற இயலாது. இந்த மாடலின் பிற தகவல்கள் மற்றும் விலை குறித்த தகவலகள் இன்னும் வெளியாகவில்லை.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon