மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இன்று லெனின்; நாளை பெரியார்?

இன்று லெனின்; நாளை பெரியார்?

திரிபுராவில் இடதுசாரி ஆட்சி அகற்றப்பட்டு 3 நாட்களே ஆகும் நிலையில், பாஜக ஆதரவாளர்கள் லெனின் சிலையை அகற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ள கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஒரு சில நாட்களில் அங்கு பாஜக ஆட்சி அமையவுள்ளது.

இந்தத் தேர்தல் வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். அதே வேளையில், பாஜக தொண்டர்கள் மற்றும் இடதுசாரித் தொண்டர்களிடையே ஆங்காங்கே மோதல்களும் நிகழ்ந்துவருகின்றன. பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தெற்கு திரிபுராவின் பிலோனியா நகரில் இருந்த ரஷ்ய முன்னாள் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான விளாடிமிர் லெனினின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் நேற்று (மார்ச் 5) பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். லெனின் சிலை அகற்றப்படும்பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கிடையே திரிபுராவில் பாஜக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. லெனின் சிலை அகற்றம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திரிபுரா ஆளுநரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய ஆட்சி அமையும்வரை அமைதியை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பாமியான் பள்ளத்தாக்கில் 1,500 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைகள் இருந்தன. இவற்றை பாரம்பரியக் கலைப் படைப்புகளாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. எனினும், 2001ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் டைனமைட் வைத்து இந்தச் சிலைகளைத் தகர்த்தெறிந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதன் மூலம் அத்தகைய தாக்கத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

பெரியார் சிலையும் அகற்றப்படும்

இதற்கிடையே, லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு கி.வீரமணி, கு.ராமகிருஷ்ணன், முத்தரசன் போன்ற தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி, “ தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இவ்வாறு சொல்வதற்கு துணிச்சல் வந்துள்ளது. ஆகவே, சிலையை அவர்கள் உடைக்கட்டும். அதனுடைய விளைவுகளை அவர்கள் அறுவடை செய்யட்டும். பெரியார் சிலை உடைக்கப்பட்ட பின்னர் பாஜகவினரால் தமிழகத்தில் நடமாட முடியுமா என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கு.ராமகிருஷ்ணன் பேசுகையில், “ திரிபுராவில் சூழ்ச்சியால் ஆட்சி வந்த பாஜக மக்கள் பணியையே தொடங்காத நிலையில் லெனின் சிலையை அகற்றியுள்ளது. பெரியார் சிலையை அகற்றுவது என்பது கனவிலும் நடக்காது. ஏதோ சதிவேலையில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என்று தெரிகிறது. இது பெரியார் மண், அவர்களின் எண் நிறைவேறாது. நோட்டா அளவில் கூட வாக்கு பெறாத பாஜகவை முழுமையாக அழிக்கும் நோக்கில் எச்.ராஜா. பேசியுள்ளார்” என்று கண்டித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “மத்தியில் அமைந்துள்ள ஆட்சி, மனுதர்ம கொள்ளைகளை கொண்ட ஆட்சி. தனது கருத்தின் மூலம் விளம்பரம் தேடும் வேலைகளில் எச்.ராஜா ஈடுபடுகிறார். பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா சொல்லியுள்ளார். பெரியார் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே சொந்தமானவர்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் சமூக வலைதளங்களிலும் எச்.ராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon