மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்!

பிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்!

விநியோகஸ்தர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள ஏர்செல் பணியாளர்கள் தங்களுக்கு உதவுமாறு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளனர்.

தமிழகத்தின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் சேவை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டன. பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முதல் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா என அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஒரு அளவிற்கு ஜியோவிற்குப் போட்டியாகத் திட்டங்களை அறிவித்து இயங்கிவரும் நிலையில், சிறு நிறுவனங்களாக இருந்துவந்த டெலினார், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.

கடந்த மாதம் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அவசரமான சூழலுக்குக் கூட யாரிடமும் தகவல்தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், வியாபாரத் தொடர்புகளுக்கும் நீண்ட காலமாக ஏர்செல் எண்ணைப் பயன்படுத்திவந்த வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஏர்செல் டெலிகாம் 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் சிக்கல் உள்ளதால் தொடர்ந்து சேவை வழங்க முடியவில்லை; எனவே நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று நிறுவனங்கள் திவால் சட்டம் பிரிவு 10இன் கீழ் அறிவிக்க வேண்டும் என்றும் ஏர்செல் செல்லுலார் லிமிடெட், டிஷ் நெட் வயர்லெஸ் லிமிடெட் மற்றும் ஏர்செல் லினிடெட் சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவால் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை மாற்றிக்கொள்ளும்படியும், அதற்கு ஏர்செல் நிறுவனம் உதவ வேண்டும் எனவும் டிராய் உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் டிராய் அறிவித்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது விநியோகஸ்தர்களின் கோபத்திற்கும் ஏர்செல் ஆளாகியுள்ளது. ஏர்செல் விநியோகஸ்தர்கள் தங்களிடம் உள்ள விற்காத ரீசார்ஜ் அட்டைகள், மோடம் உள்ளிட்டவற்றைத் திரும்பப்பெறுமாறு ஏர்செல் நிறுவனத்தை அணுகியுள்ளனர். விநியோகஸ்தர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளான ஏர்செல் பணியாளர்கள் பிரதமர் அலுவலகம், உள்துறை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குக் கடிதம் அனுப்பி, தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon