மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம்!

வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம்!

விதிமுறை மீறல் காரணமாக ஆக்சிஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கியின் 2016, மார்ச் 31 நிதி நிலையைக் குறிப்பாகக் கொண்டு மத்திய ரிசர்வ் வங்கி அவ்வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது. அதில், அவ்வங்கியின் செயல்பாட்டு வழிமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. செயற்படாச் சொத்து மேலாண்மையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்காமல் ஆக்சிஸ் வங்கி செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மோசடி நடைபெற்றதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவ்வங்கியின் ஆவணங்கள் சரிபார்ப்பில், வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுதல் ஆவணத்தில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளன. இதனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்விரு வங்கிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள அபராதமானது ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் விதிமுறை மீறல்களுக்காக மட்டுமேயாகும் எனவும், இது பரிவர்த்தனை மோசடிகள், பங்குகள் உள்ளிட்டவற்றைச் சார்ந்ததல்ல எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon