மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 14

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 14

கேபிள் சங்கர்

சினிமாவில் இருக்க வேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாகச் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக காடாறு மாதம், நாடாறு மாதமெனக் காசு சேர்த்துப் படம் எடுக்கிறவர்கள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டுவாழ் இந்தியராக இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாக வெறும் வாயில் பேசிக்கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பானாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து, தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெயர் வைத்துத் தொடங்கியாயிற்று.

டிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒரு குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாள்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதைப் பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவைப் பற்றிய அறிவைப் பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி, ‘ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்துக் காட்டக் கூடாது?’ என்பதுதான்.

நியாயமான கேள்வி. மனிதர் உடனடியாகத் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிம்மில்தான் புரொஜெக்ஷன் ஓடிக்கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பிராசசிங் செய்து பிலிம்முக்கு மாற்றி அதை பிரின்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் படத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.

மிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களைக்கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் எனக்கு வேறொரு புராஜெக்ட் விஷயமாக அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம், “சார்... டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு புரொடக்ஷன்ல இறங்காதீங்க” என்றேன். “என்னங்க சங்கர்... நீங்களே இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க?” என்று கடிந்துகொண்டார்.

சில மாதங்களுக்குப் பின் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாக இருந்தார். புதிது புதிதாய் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் எனப் பல பேரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் பலவீனமான, வழக்கமான காதல் கதை. எல்லாரையும் அனுப்பிவிட்டு, “சார், தப்பா நினைச்சுக்காதீங்க... புதியவர்களை வைத்துப் படம் ஆரம்பிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்னதான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்க்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கன்டென்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.

நண்பருக்குக் கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்தப் பட விஷயமா நாம பேச வேணாம்” என்று கிளம்பிவிட்டார்.

எனக்கு அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு அவரை நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும்போதுகூட நான் தடுத்துவிடுவேன்.

ஒருநாள் பிரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காகச் சென்றிருந்தபோது, கார் பார்க்கிங்கில் அவரைச் சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய்ப் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து. “நீங்க சொன்னதுதான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.

“படம் ஆரம்பிக்கும்போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆரம்பிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கால வெச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்சபோது கழுத்து வரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னிக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்குக்கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வெச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க” என்றார்.

நான் ஏற்கனவே சொன்னேன்னிலலியா என்று சொல்லி அவர் மனதை நோகடிக்க விரும்பவில்லை. படம் பார்ப்பதாகச் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டு பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சினைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து சோதனை செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள்.

“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்கக் கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்குத் தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்காக மார்க்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்குப் போங்க. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம்” என்றேன்.

இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாள்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர்தான். அங்கே வேலை செய்துகொண்டிருந்தார். சந்தோஷமானேன். பின்பு பல ஆண்டுகள் தொடர்பில்லை.

என் முதல் படம் வெளியானபோது மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு. சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக்கப்போறேன். வாங்க பேசுவோம்” என்றார்.

அந்தப் படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கந்து வட்டி-1

கந்து வட்டி -2

கந்து வட்டி-3

கந்து வட்டி-4

கந்து வட்டி-5

கந்து வட்டி-6

கந்து வட்டி-7

கந்துவட்டி-8

கந்துவட்டி-9

கந்துவட்டி-10

கந்துவட்டி -11

கந்துவட்டி -12

கந்துவட்டி -13

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon