மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு!

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு!

வரும் 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக உயரும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலை திரும்பி, உள்நாட்டு நுகர்வு, கொள்கை மாற்றம், உலகளாவிய வளர்ச்சியுடன் ஒன்றிய உள்நாட்டு வளர்ச்சி போன்ற காரணங்களால் வரும் 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

வங்கித் துறையில் வாராக் கடன் வசூலிப்பு, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எஃகுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் தனியார் துறைகளில் முதலீடுகள் உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகக் கிரிசில் நிறுவனம் கூறுகிறது. சமீபத்தில் நடப்பு 2017-18 நிதியாண்டுக்கான அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வளர்ச்சி மதிப்பீடு வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. அதில் குறிப்பிடும்படியாக உற்பத்தித் துறை 8.1 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon