மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஆளுநர் மாளிகை முற்றுகை: விவசாயிகள் கைது!

ஆளுநர் மாளிகை முற்றுகை: விவசாயிகள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், சைதாப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வலியுறுத்தி, சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடந்த 3ஆம் தேதியன்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (மார்ச் 6) காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர் விவசாயிகள் அமைப்பினர். ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், சைதாப்பேட்டை அருகே போலீசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு குழப்பம் உருவானதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆளுநர் என்பவர் தமிழக அரசின் தலைவர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி. தமிழக உணர்வுகளைப் பிரதமருக்கு ஆளுநர் எடுத்துக்கூற வேண்டும். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தி, சகல அதிகாரங்களும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக அதனை உருவாக்க வேண்டும்” என்று கூறினார் பி.ஆர்.பாண்டியன்.

தொடர்ந்து பேசியவர், வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நான்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டுக் கூட்டம் தேவையற்றது என்றும், இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமற்றது என்றும், காலம் தாழ்த்தாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon