மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

அரசாங்கம் - நீதிமன்றம்: தமிழ் சினிமாவின் முடிவு என்ன?

அரசாங்கம் - நீதிமன்றம்: தமிழ் சினிமாவின் முடிவு என்ன?

தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. தெலுங்குப் படங்கள் திரையிடுவதற்கு 30% கட்டண குறைப்புக்கு ஒப்புக்கொண்ட ரியல் இமேஜ் நிறுவனம், தமிழ்ப் படங்களுக்கு 10% மட்டும் குறைப்பதாகக் கூறியதால் உடன்படிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் புதிய தமிழ்ப் படங்கள் ரிலீஸ் செய்வதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

டிஜிட்டலில் படங்களைத் திரையிடும் முறை நடைமுறைக்கு வந்த பின், தியேட்டர்களில் பழைய பிலிம் புரொஜக்டர்கள் அகற்றப்பட்டுவிட்டன. டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கான புரொஜக்டர்களைத் திரையரங்குகள் வாங்கவில்லை.

Qube, UFO ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் பொருத்திய புரொஜக்டர்கள் மூலம் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. இதனைக் காரணமாகக் கூறித்தான் தியேட்டருக்கு ஒரு படம் திரையிட முதல் வாரம் ஏழாயிரம் ரூபாய் முதல் பதிமூன்றாயிரம் ரூபாய் வரை தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தரிடம் வசூல் செய்யப்படுகிறது. இந்த வகையில் மட்டும் 2005 முதல் இன்று வரை படங்களைத் திரையிட 600 கோடி ரூபாய் கட்டணமாக, வாடகையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகள் சொந்தமாக புரொஜக்டர் வைத்திருந்தால் புதிய படங்களைத் திரையிட ஒரு தியேட்டருக்கு ஆயிரம் ரூபாய் செலவில் முடிந்துவிடும்.

இதற்கிடையில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதில்லை எனத் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக வருகின்ற 8.3.2018 அன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

திரையரங்குகள் நடத்த உரிமம் பெற சில அடிப்படையான வசதிகள் இருக்க வேண்டும். அவற்றில் படங்களைத் திரையிடும் புரொஜக்டர் பிரதானமானவை. எனவே இவ்வசதியைத் திரையரங்க உரிமையாளர்கள் உடனடியாக சொந்தமாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் வைக்க உள்ளது. இக்கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் தமிழக அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்னையைக் கொண்டுசெல்ல உள்ளனர். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் முறையிடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுக்கப் போவதாக தெரிகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon