மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஆஸ்கரைத் தொலைத்த ‘சிறந்த நடிகை’!

ஆஸ்கரைத் தொலைத்த ‘சிறந்த நடிகை’!

ஆஸ்கர் விருது விழாவுக்குப் பிறகு நடைபெற்ற பார்ட்டியின்போது, சிறந்த நடிகைக்கான விருதுபெற்ற பிரான்சிஸ் மெக்டார்மண்ட் தனது ஆஸ்கர் சிலையைத் தொலைத்துவிட்டார். இதனால் ஹாலிவுட்டின் கவர்னர் பால் அறையில் நடைபெற்ற பார்ட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Three Billboards Outside Ebbing, Missouri திரைப்படத்தில் நடித்த மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. விருது விழா முடிந்த பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று மெக்டார்மண்டின் விருது காணாமல் போனதாக செய்தி பரவத் தொடங்கியது. எவ்வளவு தேடியும் விருது கிடைக்காததால், பார்ட்டியிலிருந்து மெக்டார்மண்ட் கிளம்பிவிட்டார். ஆனால், அவர் கிளம்பிய சில நிமிடங்களில் ஆஸ்கர் நிகழ்ச்சியைப் படம்பிடிக்க வந்திருந்த ஃபோட்டோகிராஃபர் மெக்டார்மண்டின் விருதை ஆஸ்கர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவரிடம் விசாரித்ததில் “ஆஸ்கர் மேடையேறி விருது வாங்காத ஒரு நபர், ஆஸ்கர் விருதுடன் ‘எனக்குக் கிடைத்துவிட்டது’ என்று சொல்லிக்கொண்டே கவர்னர் பால் அறையை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர்மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து சென்ற அந்த ஃபோட்டோகிராஃபர் அவருக்கே தெரியாமல் ஆஸ்கர் சிலையை மீட்டுக்கொண்டுவந்து ஆஸ்கர் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார்.

மெக்டார்மண்டுக்கு கொடுக்கப்பட்ட விருதுதான் அது என்பதை உறுதிப்படுத்திய பின், மெக்டார்மண்டிடம் அவரது விருதைத் திரும்பக் கொடுக்க ஆஸ்கர் அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அதற்கு முன்னரே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தார். எனவே, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற கேரி ஓல்ட்மன் மூலமாக அந்த விருதை மெக்டார்மண்டிடம் சேர்த்துவிடச் சொல்லிக் கொடுத்தனுப்பிவிட்டனர்.

இன்னொரு பக்கம் ஆஸ்கர் விருதைத் திருடிச்சென்ற நபர் பற்றி ஃபோட்டோகிராஃபரிடம் கேட்டறிந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். விருதைத் திருடிச் சென்றவர் டெர்ரி பிரையண்ட் என அறியப்பட்டது. அவரது ஆவணங்களைப் பரிசோதனை செய்தபோது, ஆஸ்கர் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும் அவரிடம் இருந்திருக்கிறது. இருபதாயிரம் டாலர்களைப் பிணையாக வாங்கிக்கொண்டு அவரைக் காவல் துறையினர் விடுவித்திருக்கின்றனர்.

ஆஸ்கர் அதிகாரிகளிடமிருந்து வாங்கிச்சென்ற விருதை கேரி ஓல்ட்மன் மெக்டார்மண்டிடம் சேர்த்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக மெக்டார்மண்டின் மேனேஜர் சைமன் ஹால்ஸ் ‘ In-N-Out burger ஷாப்பில் மெக்டார்மண்டும் ஆஸ்கரும் ஒன்றிணைந்தனர்’ என்று இ-மெயில் அனுப்பினார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon