மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? : தமிழிசை கருத்து

வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? : தமிழிசை கருத்து

தமிழகத்தில் தலைவர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவேன் என்று நேற்று (மார்ச் 5) சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதற்குப் பதிலளித்துள்ள பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஒவ்வொருவரும் மக்கள் பிரச்சனைகளில் செயலாற்றுவதைப் பொறுத்து அதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நேற்று (மார்ச் 5) எம்ஜிஆர் சிலை திறப்புவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், தமிழகத்தில் தலைவர்களுக்காக உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன் என்று கூறினார். மேலும், எம்ஜிஆர் ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (மார்ச் 6) காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

”வருங்காலத்தில், அவர்கள் அரசியலில் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்; மக்கள் பிரச்சனையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு செயலாற்றுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். இதையெல்லாம் பொறுத்துத் தான், வருங்காலத்தில் யார் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய தமிழிசை, தனது வார்த்தைகளை ரஜினி இன்று வெளிப்படுத்தியிருப்பதாகவும், அவரது செயலாற்றலை வைத்தே இதுபற்றி முழுமையாகக் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.

”எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. மாற்றுசக்தியாக பாஜக தான் வரும் என நாங்கள் சொல்கிறோம். இன்று, பல மாநிலங்களில் நல்லாட்சி கொடுத்து வருகிறோம்; அதே நல்லாட்சியை, தமிழகத்திலும் தர முடியும் என்ற நம்புகிறோம். ஒரு தலைவருக்கான வெற்றிடத்தைத் தன்னால் நிறப்ப முடியும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார். எல்லோரும் நம்புவோம். யாரை ஆதரிக்க வேண்டுமென்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று பேசினார்.

மேலும், எல்லா கட்சிகளும் அவரவர் பணியைச் செய்து கொண்டிருப்பதாகவும், ரஜினிக்கு ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் தன் பேச்சில் குறிப்பிட்டார் தமிழிசை. “எம்ஜிஆர் போல நான் இல்லை; ஆனால், அவரைப் போல இருக்க முயற்சி செய்வேன் என்று ரஜினியே சொல்லியிருக்கிறார். முதலில் எல்லோரும் தெளிவான நடை போடட்டும்; அதன்பின் மக்கள் எடைபோடுவார்கள்” என்று கூறினார் தமிழிசை.

செய்தியாளர்களிடம் பேசியபின் விமானம் மூலமாக தூத்துக்குடி சென்றார் தமிழிசை. திருநெல்வேலியில் இன்று நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சிகளில், அவர் கலந்து கொள்கிறார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon