மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

பேரவைச் செயலர் நியமனம்: தெளிவான விதிமுறைகள் தேவை!

பேரவைச் செயலர் நியமனம்: தெளிவான விதிமுறைகள் தேவை!

தமிழக சட்டப்பேரவைச் செயலர் நியமனத்தில் தெளிவான விதிகளை வரையறை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த பூபதி கடந்த 28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து சிறப்புச் செயலாளர் சீனிவாசன் பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்புச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே அவர் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பாஜக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 6) விடுத்துள்ள அறிக்கையில், “பேரவைத் தலைவர் தனபாலின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவர் என்ற ஒரே காரணத்திற்காக விதிமுறைகளை மீறி சீனிவாசனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவைச் செயலகப் பணி விதிகளைச் சற்றும் மதிக்காமல் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பூபதி ஓய்வு பெற்றதற்குப் பின்னர் பணி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவரைத்தான் செயலாளராக நியமித்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் பேரவைத் தலைவரின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சீனிவாசனை பேரவைச் செயலாளர் பதவிக்கு நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், “தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தில் நிர்வாகப் பணி, விவாதங்களைத் தொகுக்கும் ஆசிரியர் பணி என இரு வகையான பணிப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நிர்வாகப் பிரிவில் உள்ளவர்களை மட்டும்தான் பேரவைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் நிர்வாகப் பிரிவில் கூடுதல் செயலாளராக உள்ள வசந்தமலர் என்பவர்தான் அப்பணிக்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரை விடுத்து ஆசிரியர் பணியில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய சீனிவாசனை அப்பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பேரவை விதிகளையும், மரபுகளையும் மீறிய செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைச் செயலர் பதவியை இடமாற்றத்தின் மூலம் நிரப்ப முடியும் என்றும், அதன்படி பேரவைத் தலைவரின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய சீனிவாசனை ஆசிரியர் பணிப் பிரிவிலிருந்து, நிர்வாகப் பணி பிரிவுக்கு மாற்றம் செய்து செயலாளராக நியமித்திருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர், “1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகப் பணி விதிகளின்படி செயலாளர் பதவியை மூன்று வழிகளில் நிரப்ப முடியும். முதலாவதாக பதவி உயர்வின் மூலமும், அடுத்ததாக இடமாற்றத்தின் மூலமும், மூன்றாவதாக நேரடி நியமனத்தின் மூலமும் பேரவைச் செயலாளர் பதவியை நிரப்ப முடியும். எனினும் முதல் வாய்ப்பு இல்லாத நிலையில்தான் அடுத்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். முதல் இரு வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தால் மூன்றாவது வாய்ப்பைப் பயன்படுத்தலாம். ஆனால் பேரவைச் செயலர் பூபதி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் நிர்வாகப் பிரிவின் கூடுதல் செயலராக உள்ள வசந்திமலரை நியமிக்க வேண்டும் என்பதற்குத் தெளிவான விதிகள் உள்ளன. இந்த வாய்ப்பு இருக்கும்போதே இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசிரியர் பணிப் பிரிவில் இருந்த சீனிவாசனை நிர்வாகப் பிரிவுக்கு மாற்றி நியமித்தது தவறாகும்.

அதுமட்டுமின்றி, இதற்கு முன் சீனிவாசனை சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராக நியமித்ததை எதிர்த்து நிர்வாகப் பிரிவு கூடுதல் செயலர் வசந்திமலர், இணைச் செயலர் சுப்பிரமணியம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பே சீனிவாசனுக்கு அடுத்த பதவி உயர்வு கொடுத்தது தார்மிக அடிப்படையில் தவறாகும்.

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசனை நியமித்த ஆணையை ரத்து செய்துவிட்டு, அந்தப் பதவிக்குத் தகுதியுடையவரை நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் பதவிக்கான தகுதிகள் மற்றும் நியமன முறையை அரசு தெளிவாக வரையறுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 6 மா 2018