மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

கடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்!

கடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்!

மீனாட்சியம்மன் கோயில் கடைக்காரர்கள் மாற்று இடத்தில் கடை அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

அங்குள்ள கடைகளால்தான் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறிக் கடைகளைக் காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்குக் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் ’பிப்ரவரி 9ஆம் தேதி பகல் 12 மணிக்குள் கடைகளை அகற்ற வேண்டும். உரிமையாளர்கள் தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும் 3 வாரத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. கோயில் கடைகளுக்கு மாற்று இடமாக அருகிலுள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தை ஒதுக்க ஆலோசனை நடந்துவந்தது.

இந்நிலையில் கோயில் கடைக்காரர்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 6) புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர். குன்னத்தூர் சத்திரம் அல்லது மதுரை பழைய மார்க்கெட்டில் கடைகளை அமைக்க இடம் ஒதுக்க வேண்டுமென அவர்கள் அதில் கோரியுள்ளனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இடம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon