மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மேகாலய முதல்வராக பதவியேற்றார் சங்மா

மேகாலய முதல்வராக பதவியேற்றார் சங்மா

மேகாலாயாவில் தேசிய மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரான பி.ஏ. சங்மாவின் மகனுமான கான்ராட் சங்மா இன்று (மார்ச் 6) முதலமைச்சராகப் பதவியேற்றார். அம்மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

60 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மேகாலயா சட்டமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காத நிலையில், 19 இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியை வைத்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைக்க பாஜக கடுமையாக முயற்சித்தது. இத்தனைக்கும் பாஜக அங்கே இரண்டே இரண்டு இடங்கள்தான் ஜெயித்தது.

இது தவிர ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் ஜனநாயக முன்னணி 4 இடங்களில் வென்றுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த பாஜக, கான்ராட் சங்மாவின் தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது.

தனக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சங்மா மேகாலயா ஆளுநரை சந்தித்து பிப்ரவரி 4ஆம் தேதி கடிதம் கொடுத்தார். தேசிய மக்கள் கட்சி - 19, ஐக்கிய ஜனநாயக கட்சி - 6, மக்கள் ஜனநாயக முன்னணி - 4, மலைதேச மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜகவைச் சேர்ந்த தலா 2 உறுப்பினர்கள், ஒரு சுயேச்சை என மொத்தம் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார். இதையடுத்து ஆளுநர் சங்மாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

அதன்படி இன்று காலை ஆளுநர் மாளிகையில் சங்மா முதல்வராகப் பதவியேற்றார்.

மேகாலயாவில் 21 சட்டமன்ற உறுப்பினர்களை ஜெயித்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவும், 2 உறுப்பினர்களை ஜெயித்த பாஜக ஆளுங்கட்சியாகவும் ஆகியிருக்கிறது!

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon