மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுப்பேன்!

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுப்பேன்!

காமராஜரின் ஆட்சி என்ற முழக்கத்தை எப்போதாவது காங்கிரஸார் முணுமுணுப்பு வடிவில் மொழிவார்கள். அம்மா ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று எடப்பாடியும், அம்மா ஆட்சியை அமைப்போம் என்று தினகரனும் ஒவ்வொரு மைக்கிலும் சொல்கிறார்கள்.

ஆனால், ‘எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன். எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சியை, எம்.ஜி.ஆரின் சாமானியர்களுக்கான ஆட்சியை, எம்.ஜி.ஆரின் மத்திய தர வர்க்கத்தினருக்கான ஆட்சியை நான் கொடுப்பேன்’ என்று புதிய முழக்கத்தை முன் வைத்திருக்கிறார், இன்னும் கட்சி ஆரம்பிக்காத ரஜினிகாந்த்.

கட்சியை முறையாக ஆரம்பிப்பதற்கு முன்பே நேற்று (மார்ச் 5) சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினி.

எம்.ஜி.ஆரிடம் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், எம்.ஜி.ஆரின் ஓட்டுநர்கள் என்று பழைய ஆட்கள் முதல், இருபது வயதுகளில் இருக்கும் மாணவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசினார் ரஜினி. அப்போது தன்னை மையமாக வைத்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது; இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார்.

பேன்ட் சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள் என்கிறார்கள் அரசியல்வாதிகள். ஐயா நான் மற்றவர்களைப் பற்றி பேசலை. என்னைப் பற்றி மட்டும் சொல்றேன். என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், 67 வயசுலயும் மக்களை மகிழ்விக்கிறேன். ஆனா, நீங்க உங்க வேலையைச் சரியாக செய்யவில்லையே? அதனால்தான் நான் வர வேண்டியிருக்கு.

1996இல் இருந்து அரசியல் என்னும் தண்ணீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். எனது மதிப்புக்குரிய டாக்டர் கலைஞரிடம் பழகியிருக்கேன். மூத்த அரசியல்வாதி அமரர் மூப்பனார் அவர்களோடு பழகியிருக்கேன். என் நண்பர் சோ சாரிடம் நிறைய பழகியிருக்கேன். இவர்களிடம் அரசியல் பத்தியும் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும். எனக்கும் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை இருக்கு. எனவே தான் அரசியலுக்கு வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து ரஜினி, “நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கணும்னு எதிர்பார்க்கலை. ஆனால், ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? எனக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், ஏளனம் செய்கிறார்கள். அரசியல் பாதை பூ மாதிரி கிடையாதுன்னு எனக்குத் தெரியும். அது முட்கள் நிறைஞ்ச பாதை. பாம்புகள் நிறைஞ்ச பாதை. ஆனாலும் இந்த வயசுல நான் அரசியலுக்கு வர்றேன்னு சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த திட்டுப்பிடி அரசியல் வேண்டாம். இதை இத்தோடு நிறுத்திக்கலாம்” என்றார்.

அடுத்து, “எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது எனச் சொல்கிறார்கள். சினிமாவில் இருந்துவரும் யாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. சினிமாவில் இருந்து அவரை போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆராக முடியாது.

எம்.ஜி.ஆர் யுக புருஷர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம். இன்னும் நூறு அல்லது ஆயிரமாண்டுகள் ஆனாலும் அவரை போன்று யாராலும் வர முடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால் மட்டும்தான் உண்டு. எம்.ஜி.ஆரை போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால் அவனை விட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.

ஆனால்... அந்த எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி. சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். மக்களுடைய ஆசீர்வாதம், இளைஞர்கள் பங்களிப்பு, சிறந்த தொழில்நுட்பம், நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.

ஆன்மிக அரசியல் என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கேன். தூய்மைதான் ஆன்மிக அரசியல்” என்று சுமார் 40 நிமிடங்கள் பேசினார் ரஜினி.

“வெற்றிடம் இருக்கு அதனால்தான் அரசியலுக்கு வர்றீங்களானு கேக்குறாங்க. ஆமாய்யா வெற்றிடம் இருக்கு. ஜெயலலிதா என்ற மகத்தான ஆளுமை இப்போது இல்லை. 13 வருஷங்கள் எதிர்க்கட்சியா இருந்தாலும் கட்சியைக் கட்டிக் காப்பாத்துற திறமைகொண்ட கலைஞர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கார். இப்போது தமிழ்நாட்டுக்குத் தலைவர்கள் இல்லை. நல்ல தலைமை இல்லை. அதனால் அந்த இடத்தை நிரப்பலாம்னு நான் வர்றேன்” என்று பகிரங்கமாக போட்டு உடைத்தார் ரஜினி.

ரஜினியின் இந்த ஒப்பனையற்ற பேச்சு மக்கள் மனதை வெகு சுலபமாக கவரும் என்கிறார்கள் பத்திரிகையாளர்களும், சமூக நோக்கர்களும்.

“எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து ரஜினி பேசிய நீண்ட உரை பல விளக்கங்களை உள்ளடக்கி உள்ளது. ஒரே நேரத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ ஆகிய மூன்று கூடாரத்துக்கும் வீசப்பட்ட வலை. எம்.ஜி.ஆர் மாதிரி இயல்பான பேச்சு. அடித்தட்டு மக்களை ஈர்ப்பதற்கான எளிய நடை உள்ளது.

கமலை விட மாஸ் ஈர்ப்பு இருக்கிறது. ஆட்சி அமைப்பாரா என்பது வேறு விஷயம். எல்லோருக்கும் சவாலாக ரஜினி இருப்பார் என்றே படுகிறது இன்றைய அவரது பேச்சில் முதிர்ச்சி இருக்கிறது” என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரும் கவிஞருமான ஜெயதேவன்.

அதேபோல இளைஞர்கள் மத்தியிலும் ரஜினியின் இந்தப் பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. வரும் வழியில் வீதியெங்கும் தனக்கு பேனர்கள் வைத்ததற்காக ரஜினி மக்களிடம் மன்னிப்பு கோரியதும்கூட பேசு பொருளாக இருக்கிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon