மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கர்நாடகா தேர்தல்: போலி படங்கள் மூலம் பிரசாரம்!

கர்நாடகா தேர்தல்: போலி படங்கள் மூலம் பிரசாரம்!

கர்நாடகச் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், போலியாகப் படங்கள் மூலம் பாஜக பிரசாரம் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடகச் சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், காங்கிரஸ் வசம் உள்ள ஒரே முக்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைக்க அக்கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேநேரத்தில் பாஜகவும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என பாஜக பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வியாழனன்று பாஜக, பெங்களூருவில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, குப்பைகள் சாலைகளில் அதிகளவு உள்ளன எனக் குற்றம்சாட்டி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், “பாஜக பொய் கூறி மறுபடியும் மாட்டிக்கொண்டுள்ளது. பெங்களூரு மக்களுக்குச் சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தர காங்கிரஸ் முயன்றுகொண்டிருக்கும்போது குற்றம்சாட்டுவதிலும் பொய் சொல்வதிலுமே பாஜக பிஸியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பாஜக சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் பெங்களூருவில் எடுக்கப்பட்டது அல்ல; நேபாளம் மற்றும் மிசோராம் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்டது என ஐ.ஏ.என்.எக்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் வாமனாச்சார்யா, “நாங்கள் ஆதாரத்தை வெளியிட்டதுமே தனது முகத்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. அதனால், ஆதாரத்தில் ஓட்டைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது. சில வேளைகளில் வெவ்வேறு புகைப்படங்களும் ஒன்று போலவே தோற்றமளிக்கும். எங்களின் ஆதாரம் முற்றிலும் உண்மையானது” எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon