மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மூன்றாவது அணிக்கு அழைத்த மம்தா

மூன்றாவது அணிக்கு அழைத்த மம்தா

மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவடைய இன்னும் ஒரு வருடமே மீதமுள்ள நிலையில், அதற்கு முன்கூட்டியே நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றி, மூன்றாவது அணி என்னும் கோஷத்தை முன்வைக்க வைத்துள்ளது. இதுகுறித்து கடந்த 3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது” எனக் கேள்வி எழுப்பியதோடு, “தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டுக்கு ஓர் அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளையும் தோற்கடிக்க மூன்றாவது அணி அவசியம்” என்று வலியுறுத்தினார். பாஜக, காங்கிரஸ் இல்லாத ஆட்சியை அமைப்பதற்குத் தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சந்திரசேகர ராவின் மூன்றாவது அணி குறித்த கருத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். சந்திரசேகர ராவ் உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் மம்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது அணிக்கு வரும்படி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மம்தா பேசியுள்ளார். ஸ்டாலினும் பரிசீலிக்கிறேன் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மம்தா பேசிய தகவலை ஸ்டாலின் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் திமுக தற்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், மூன்றாவது அணி என்னும் கோஷம் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon