மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

பிணையில் வந்தவர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!

பிணையில் வந்தவர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!

கடலூரில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த வேன் ஓட்டுநர் வினோத் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் தனியார் கல்லூரி ஒன்றின் வேன் ஓட்டுநரான வினோத், தினமும் வேனில் செல்லும்போது மாணவிகளிடம் பழகி அதை படிப்படியாகத் தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தி வந்தார். பெண்களைக் காதலித்து, பாலியல் வன்கொடுமை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கடலூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் வினோத்தைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறிது நாள்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால், ஜாமீனில் வந்த வினோத் காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்துப் போடாமல் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். கையெழுத்து போட வரவில்லை எனில் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் நீதிமன்றத்துக்குத் தபால் அனுப்பியுள்ளனர்.

இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து வினோத் காணவில்லை என்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மார்ச் 2ஆம் தேதி வினோத் தந்தை தணிகாசலம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே புகார் அளிப்பதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை ரமேஷ் பிப்ரவரி 27ஆம் தேதி முதுநகர் காவல் நிலையத்தில், எங்கள் குடும்பத்தில் மீண்டும் ஒரு பெண்ணை கடத்தப்போவதாக வினோத் முகநூலில் தேவையில்லாமல் பதிவு செய்து வருகிறான் என்று வாய்வழியாக புகார் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடலூர் முதுநகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சோனங்குப்பம் மீனவக் கிராமத்தை ஒட்டிய கடற்கரையில் கை கால் கட்டிய நிலையில் வினோத் உடல் கரை ஒதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகார் அளித்த ரமேஷை சந்தேகத்தின் அடிப்படையில் ரகசிய போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில், “பிப்ரவரி 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் முதுநகருக்கு எங்கள் வீடு அருகே வந்தவன், எங்கள் உறவுக்கார பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்தான். அப்போது அப்பெண் கத்தியதும் நாங்கள் ஓடிவந்ததைப் பார்த்து அவன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றான்.

ஆனால், விடாமல் அவனைத் துரத்தி சென்று ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகில் மறித்து இரும்பு கம்பியால் அடித்ததில் மயங்கி விழுந்துவிட்டான். மக்கள் கூட்டம் கூடியதால் வேறு வழியின்றி எங்கள் சொந்தக்கார பையன்தான் என்று ஓர் ஆட்டோவில் சோனங்குப்பத்துக்கு தூக்கி வந்தோம். ஆட்டோவிலிருந்து இறக்கியதும் உயிர் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கல்லைக் கட்டி கெடிலம் ஆறு இணையும் கடல் முகத்துவாரத்தில் போட்டுவிட்டோம்” என்று காவல் துறையில் ரமேஷ் கூறியுள்ளார்.

போலீஸார், “வினோத்தை கொலைசெய்து கடலில் தூக்கிப்போட உதவியது யார்?” என்று கேட்டதற்கு, தான் மட்டும்தான் கொலை செய்து கடலில் போட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்வோம் என்று ரகசிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon