மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஒரு நாளைக்கு 35 கிலோமீட்டர் பயணம்!

ஒரு நாளைக்கு 35 கிலோமீட்டர் பயணம்!

இந்தியப் பயணிகள் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 1,000 கிலோமீட்டர் பயணிப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நாடு முழுவதும் கொண்டுவரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை மக்களிடையே கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு உள்ளது. இதையொட்டி எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்து ஃபீட்பேக் கன்சல்டிங் நிறுவனம் இந்தியாவின் மெட்ரோ, முதல் தர, இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களில் சுமார் 650 பேரிடம் கருத்துக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் சுமார் 75 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு 35 கிலோமீட்டர் என, ஒரு மாதத்துக்குச் சராசரியாக 1,000 கிலோமீட்டர் வரையில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவிகிதத்தினர் கார்களை பாயின்ட் டு பாயின்ட் பயணங்களுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 31 சதவிகிதத்தினர் அலுவலகங்களுக்கும், 44 சதவிகிதத்தினர் குடும்பத் தேவைகளுக்காகவும், 25 சதவிகிதத்தினர் பல்நோக்குப் பயன்பாட்டுக்கும் கார்களில் பயணிக்கின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாட்டில் அவற்றை சார்ஜ் செய்வது பற்றியே இந்த ஆய்வில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் கார்களில் எரிபொருளை நிரப்புவதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே எலெக்ட்ரிக் வாகனங்களாக இருந்தால் அவற்றை வீடுகளில் சார்ஜிங் மையங்கள் மூலமாக இரவு நேரங்களில் சார்ஜிங் செய்து கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon