மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018

‘அர்ஜுன் ரெட்டி’ ஜோடியாகும் மெஹ்ரீன்

‘அர்ஜுன் ரெட்டி’ ஜோடியாகும் மெஹ்ரீன்

தமிழில் அர்ஜுன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மெஹ்ரீன் பிர்ஜிதா ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தீப் வாங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தேவதாஸ் கதையை இந்தக் காலகட்டத்துக்கேற்ப மாற்றி உருவாக்கிய இந்தப் படத்தில் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

தற்போது விக்ரம் நடித்து வெளியான இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்ஜிதா நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை (மார்ச் 5) ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன், இயக்குநர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மெஹ்ரீன் ஃபர்ஸ்ட் ஸ்பாட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நான் விஜய்யை அர்ஜுன் ரெட்டி என்றுதான் அழைக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் விஜய்யும் தெலங்கானா அரசுக்காக ஒரு பாடலில் நடித்தோம். அதுதான் நான் விஜய்யுடன் நடிக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் தமிழில் மீண்டும் எனக்கு நல்ல ரீஎன்ட்ரியாக அமைந்துள்ளது” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon