மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

சிறப்புக் கட்டுரை: முதியவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் இந்தியா!

சிறப்புக் கட்டுரை: முதியவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் இந்தியா!

மோயின் காஸி

உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரைக்கொண்ட இந்தியாவில் உலகின் ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினரும், முதியவர்களில் எட்டில் ஒரு பகுதியினரும் வாழ்கின்றனர். பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் முறைசாராத் தொழிலையே சார்ந்து வாழ்கின்றனர். வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையைத் தவிர வேறு எந்த உத்தரவாதமும் அவர்களுக்கு இல்லை. இந்தியாவில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவிவந்த வரையிலும் குடும்ப அமைப்பே வயதானவர்களுக்கு ஆதரவாக இருந்துவந்தது. புதிய சமூக நெறிமுறைகள் குடும்ப ரீதியிலான ஆதரவைக் குறைத்துவருகின்றன. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முதுமைக் காலப் பாதுகாப்பு என்பது பெரிய சவாலாகிவிட்டது. நிதி விஷயத்தில் அதிக விவரமறியாத தன்மை நிலவுவதால் வயதானவர்கள் தங்களது ஓய்வுக் காலம் குறித்து சரியாகத் திட்டமிட்டு முடிவுகளை எடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட முற்போக்கான நடவடிக்கையில், ஓய்வூதிய ஒழுங்குமுறை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை 60இலிருந்து 65ஆக அதிகரித்துள்ளது. இது அதிக அளவிலான மக்கள் ஓய்வூதியம் பெற உதவியாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆன்லைன் மூலமும் செய்துகொள்ளலாம். இந்த மாற்றத்துக்குப் பிறகு, 60 முதல் 65 வயது வரையுள்ள எந்த இந்தியக் குடிமக்களும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். 70 வயது வரை அதன் உறுப்பினராகத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறும் மக்கள்தொகை விகிதாச்சாரம்

இந்தியாவில் மக்கள்தொகை மாற்றம், குறைந்த கருவுறுதல், அதிகரித்துவரும் ஆயுட்காலம் ஆகியவை மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. குடும்பங்கள் சுருங்கி, தனிக் குடித்தனங்கள் பெருகிவருகின்றன. தனித்து வாழும் போக்கு, மாறிவரும் ஆசைகள், வாழ்க்கை மாற்றங்கள் ஆகியவை தலைமுறை இடைவெளியை அதிகரிக்கின்றன.

இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு அளித்துள்ள தகவலின்படி, முதியவர்களில் 45 சதவிகித ஆண்களும், 75 சதவிகிதப் பெண்களும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்தியாவின் வயதான மக்கள் தொகையின் வளர்ச்சி ஒட்டுமொத்த மக்கள்தொகை விகிதத்தைப் போல இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை பிரிவு, 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.16 சதவிகித மக்கள் 60 வயதுக்கு மேலானவர்களாகவும், 60.34 சதவிகிதம் பேர் 15 முதல் 59 வயதுடையவர்களாகவும் இருப்பார்கள் என மதிப்பிட்டுள்ளது.

கூட்டுக் குடும்பம் அழிந்த நிலை, அதிகரிக்கும் ஆயுட்காலம், குறைவான சேமிப்பு, ஓய்வூதியம் இல்லாமை ஆகியவற்றால் முதுமைக் காலங்களில் மூத்த குடிமக்கள் வறுமையில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதில், குறைந்த வருமானம் காரணமாகப் பெண்கள் இன்னும் பின்தங்கியுள்ளனர். இளம் பருவத்தில் வேலைவாய்ப்பில் தொடர் குறுக்கீடு, பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வதற்கான குறைந்த வாய்ப்பு ஆகியவையே இதற்கான காரணங்கள்.

முதுமைக் காலத்தின் பாதுகாப்புப் பிரச்சினைகள்

* வெவ்வேறு தலைமுறைகள் பரஸ்பரம் பாதுகாத்துக்கொள்ளும் முறையானது உடைந்துவிட்டது அல்லது அது நம்ப முடியாததாகக் கருதப்படுகிறது.

* முதுமைக் காலத்தின் பாதுகாப்பு, நிலம், சொத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சொத்து என்பது பல ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

* பொதுவாக, முதுமைக் காலத்துப் பாதுகாப்புக்குத் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவதில் ஏழை மக்களின் அனுபவமும் திறமையும் குறைவாகவே உள்ளன.

வயதான ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நம்பகமான ஓய்வூதியத் திட்டம் உடனடியாகத் தேவை. வயதான காலத்தில் நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த, வேலை செய்யும் பருவத்தில் சேமிப்பதுதான் பொதுவாக ஓய்வூதியம் என வரையறுக்கப்படுகிறது.

ஏழைகளுக்கும், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் இரண்டு வகையான ஓய்வூதியங்கள் வழங்கப்படலாம்.

முதலாவதாக, பொது அல்லது சமூக ஓய்வூதியம். அரசு, வருமானத்தைப் பெருக்கி, அந்த வருமானத்திலிருந்து முதியவர்களுக்கு உதவுதல். இரண்டாவது மைக்ரோ ஓய்வூதியம். இது தனிப்பட்ட ஓய்வூதிய சேமிப்புத் திட்டம். மக்கள் வேலைபார்க்கும் காலத்தில் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்துக்கொள்கின்றனர். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அவர்கள் சேர்த்துவைத்த பணம் அவர்களது முதுமைக் காலத்தில் மாதந்தோறும் சிறு சிறு தவணைகளில் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும். முதல் ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்றுவது கடினம். ஓய்வுபெறும் வயதைக் கூட்டி, அனைவருக்குமான சமூக ஓய்வூதியத்தை வழங்குவது என்பது இதற்கான தீர்வாக அமையக்கூடும்.

தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள், அதன் அடிப்படையில் தங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர். அவர்களுக்கு வருமானம் குறைவு. அவர்களுடைய உடனடி நிதித் தேவை, எதிர்காலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிப்பதில்லை. எனவே, அவர்களால் நீண்ட கால எதிர்காலத்துக்குத் திட்டமிட முடியவில்லை. அதனால் அவர்கள் சாகும்வரை உழைத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேசிய அளவில், அவர்களுக்குப் பொருத்தமான எந்த ஓய்வூதியமும் இல்லை. சொந்த நிதித் திட்டமோ, அல்லது முறைசார்ந்த பொதுத் திட்டமோ அல்லது அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகளோ அவர்களின் முதுமைக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை.

முறைசாராத் துறையின் தொழிலாளர்கள் முறைசார் துறையின் ஊழியர்களைப் போன்று ஓய்வு பெறுவதில்லை என்றாலும், வயதான காலத்தில் உடல்நலம் முதலான பல காரணங்களால் அவர்களுடைய சம்பாதிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் மைக்ரோ ஓய்வூதியத் திட்டத்தில், சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் சரிவுக்கு இணையாக ஒரு வருவாய் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஓய்வூதியத் திட்டம்

இந்தியாவின் ஓய்வூதியத் தொழில்துறை இன்னமும் போதிய அளவு வளரவில்லை என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. பெரும்பாலான மக்களுக்கு ஓய்வுக் கால வருமானம் பற்றிப் போதிய முனைப்பு இல்லை. மொத்த இந்திய மக்கள்தொகையில் வெறும் 7.4 சதவிகிதம் மட்டுமே ஏதேனும் ஓர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் உள்ளனர். இது மிக மிகக் குறைவு. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.45 சதவிகிதம் மட்டுமே சமூகப் பாதுகாப்புக்குச் செலவழிக்கிறது. ஆசிய நாடுகளில் இவ்விஷயத்தில் இந்தியா கடைநிலையில் உள்ளது. சீனா, இலங்கை, தாய்லாந்து, நேபாளம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளது.

பிரபல மைக்ரோ நிதி நிபுணர் ஸ்டூவர்ட் ரூதர்போர்ட், மைக்ரோ ஓய்வூதியத் திட்டம் குறித்த ஏழைகளின் சங்கடத்தைச் சுருக்கமாக விளக்குகிறார். “ஏழை மக்கள் சேமிப்பதன் நோக்கத்தையும் மதிப்பையும் நன்கு அறிந்திருக்கின்றனர். சேமிப்பின் மூலம் வயதான காலத்தில் பாதுகாப்புக்கு வழி இருக்கும் என்பதை அவர்கள் உணர்கின்றனர். அதற்கான வாய்ப்பு வரும்போது அதைப் பற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய சொந்த சூழ்நிலைகளிலும், அவர்களுக்குக் கிடைக்கும் நிதிச் சேவைகளிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதனால் நடைமுறையில் வெற்றி என்பது விதிவிலக்காகவே இருக்கிறது” என்கிறார்.

மைக்ரோ ஓய்வூதியம் தீர்வா?

பொருளாதார ஓய்வூதிய முறை விரைவாக உருவாக வேண்டும் இல்லையேல் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்றுவிடும். உண்மையில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், கிட்டத்தட்ட 85 சதவிகித இந்தியத் தொழிலாளர்கள் முறைசாராத் துறையில் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தினக் கூலித் தொழிலாளர்களாக இருக்கின்றனர். அரசு ஆதரவு தரும் பல மைக்ரோ ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. ஆனால், சிக்கல்களும் உள்ளன. தொடர்ந்து வருமானம் இல்லாதிருத்தல், நீண்ட கால அளவில் சேமிக்க மக்கள் முன்வராத நிலை, வாடிக்கையாளர்களை எளிதில் ஒருங்கிணைக்க முடியாத அளவில் அவர்கள் தொலை தூரங்களில் பரவி இருத்தல் ஆகிய பிரச்சினைகள் இருக்கின்றன.

அடல் பென்ஷன் திட்டம் 2015ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தில் ஏழு மில்லியன் பயனாளிகள் உள்ளனர். அவர்கள் கணக்கில் மொத்தமாக 3,000 கோடி ரூபாய் உள்ளது.

மைக்ரோ ஓய்வூதியத் திட்டத்தில் தொகை குறைவாகவும், பரிமாற்றங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. இருப்புத் தொகை குறைவாகவும், பரிமாற்றச் செலவுகள் அதிகமாகவும் இருப்பது பெரிய பிரச்சினை. அது மட்டுமில்லாமல், இதில் குறைந்த கமிஷன் மட்டுமே கிடைப்பதால் ஏஜென்டுகள் வாடிக்கையாளர்களிடம் இந்தத் திட்டத்தைக் கொண்டுசெல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. திட்டம் முடிவடையும் காலத்துக்கு முன்பாகவே பணத்தைத் திரும்பப்பெறுதல், கணக்கை மூடுதல் ஆகியவையும் இதில் பிரச்சினையாக இருக்கின்றன.

மைக்ரோ ஓய்வூதியத் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், அந்தத் திட்டத்தால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம், வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் லாபம் ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும். வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய வசதியும் அந்தத் திட்டத்தில் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களின் வருமானம், திடீரென்று ஏறும், இறங்கும் என்பதால், அவர்களுக்கான திட்டம் குறைந்தபட்ச டெபாசிட் தொகை போன்றவற்றில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மிகவும் குறைந்த அளவில் பணம் கட்டுவது, சீரற்ற முறையில் பணம் செலுத்துவது ஆகியவற்றால் அவர்களுக்குத் தேவையான போதிய பாதுகாப்பு கிடைக்காமல் போகிறது. குறைந்த வருவாய் கொண்ட மக்கள், அதிக மதிப்பிலான தொகையைவிட குறைந்த மதிப்பிலான தொகை மற்றும் அடிக்கடி டெபாசிட் செய்யும் முறையை விரும்புகின்றனர். பெரிய அளவிலான தொகையைத் திரட்டுவது அவர்களுக்கு மிகவும் சிரமம். அடிக்கடி வைப்புத் தொகையைச் செலுத்துவதற்கு வசதியாக, வீட்டுக்கு வந்து வசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பெருமளவில் பரவிவிட்ட செல்போன் தொழில்நுட்பம் இந்தக் காரியத்தை எளிதாக்கிவிடக் கூடியது.

மைக்ரோ ஓய்வூதியத் திட்டமானது வெற்றிபெற வேண்டுமென்றால், அது சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். திட்டத்தின் வடிவமைப்பு எளிதாக இருக்க வேண்டும். அதில் இணையும் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர் மோயின் காஸி பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்)

நன்றி: https://qrius.com/india-moves-make-old-age-secure/

தமிழில்: சா.வினிதா

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

செவ்வாய் 6 மா 2018