மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

கெயில் கியாஸ்: 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்!

கெயில் கியாஸ்: 30  மாதங்களில் நிறைவேற்றப்படும்!

விவசாயிகளின் ஒப்புதலுடன் அடுத்த 30 மாதங்களில் கெயில் கியாஸ் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு வரை கியாஸ் கொண்டு செல்வதற்கான பணிகளைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கெயில் நிறுவனம் தொடங்கியது. இதில் தமிழகத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக 310 கிலோமீட்டர் தூரத்துக்குக் குழாய் பதிப்பு பணியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏழு மாவட்டத்திலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குழாய் பாதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 5) தொடங்கிய நிலையில், கெயில் கியாஸ் திட்டம் குறித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர் பரசுராமன் கேள்வி ஒன்றை எழுப்பினர். இதற்கு எழுத்துபூர்மாகப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கெயில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு ஐந்து முறை ஆலோசனை நடத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கெயில் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசுடன் மத்திய பெட்ரோலியத் துறை தொடர்பில்தான் உள்ளது. சுமுகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் காத்திருக்கிறது. விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் ஒப்புதலோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “உழவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. இத்திட்டம் நாசகரத் திட்டம் என்பதால் இதற்கு எதிராகக் கடந்த ஏழு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ள அவர், “எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படக் கூடாது என்பது விவசாயிகளின் நிலை அல்ல. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையோரங்களில் இந்தக் குழாய்களைப் பதிக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உழவர்களின் நிலை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “விளைநிலங்களின் வழியாக குழாய் பாதைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்; தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon