மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 8

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 8

இராமானுஜம்

இவரால் மட்டும் எப்படி முடிகிறது?

நடிகர்கள் சம்பளத்தைப் பற்றிப் பேசி டிஜிட்டல் கட்டணக் கொள்ளைப் பிரச்சினையைத் திருப்பூர் சுப்பிரமணி திசை திருப்பக் காரணம், டிஜிட்டல் நிறுவனங்களால் அதிகமான பயன்களையும் வருவாயையும் பெறக்கூடிய நான்கு நபர்களில் முதன்மையானவர் திருப்பூர் சுப்பிரமணி எனத் திரையுலகினரால் கூறப்படுகிறது.

அதனால்தான் சுப்பிரமணி டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை என்கிறார்கள். ஆனால் சுப்பிரமணி, ‘என்னைப் போன்று நேர்மையானவன் சினிமாவில் எவனும் இல்லை; 165 ரூபாயுடன் சினிமாத் தொழிலுக்கு வந்த என்னை வாழவைத்தது, வளத்தைக் கொடுத்தது தமிழ் சினிமா’ எனச் சிங்கமென மேடைகளில் முழங்குபவர்.

திருப்பூர் யுனிவர்சல் தியேட்டரில் எட்டு பங்குதாரர்களில் ஒருவராகத் தியேட்டர் தொழிலில் கால் பதித்தவர் சுப்பிரமணி. அவர் சினிமாவுக்குள் நுழைந்த நேரம் சினிமா ஆரோக்கியமாக வசூல் குவிந்த காலம்.

தியேட்டர்களில் காலைக் காட்சிகளுக்குப் படங்களைத் திரையிட்டுவந்த சுப்பிரமணி, கோவை திரைப்பட விநியோகப் பகுதிகளில் 1980களில் முன்னணி விநியோகஸ்தராக வளர்ந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களின் படங்கள் திருப்பூர் சுப்பிரமணியின் சக்தி பிலிம்ஸ் ரிலீஸ் ஆகவே இருந்தது.

சுப்பிரமணி நிராகரித்த படங்களைத்தான் மற்ற விநியோகஸ்தர்களால் வாங்க முடியும் என்கிற அளவுக்குத் தேடித் தேடிப் படங்களை வாங்கியவர் சுப்பிரமணி.

வியாபாரத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லாத வகையில் நடிகர்களின் சம்பளம் உயர்ந்தபோது புதிய படங்களை வாங்குவதை நிறுத்திக்கொண்ட சுப்பிரமணி, திரையரங்குத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தயாரிக்கப்படும் படங்கள் பெரும்பகுதி முதலீட்டை தியேட்டர் வசூல் மூலமாகத்தான் எடுத்தாக வேண்டும். எனவே, தியேட்டர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் சென்னை வரை சினிமாத் தொழிலைக் கட்டுப்படுத்தலாம் என்கிற சூட்சுமத்தைத் தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமல்படுத்தியவர் சுப்பிரமணி.

சொந்தமாக தியேட்டர்களைக் கட்டினார். அதன் மூலம் கோவை விநியோகப் பகுதியில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றி இன்று வரை தொடர்கிறார். அத்துடன் ஃபைனான்ஸ் தொழில். இவை அனைத்தும் சேர்ந்து, தமிழ் சினிமாவில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவராக சுப்பிரமணி இன்றுவரை இருந்துவருகிறார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தியேட்டர்களை அதிகரிக்க ரியல் இமேஜ் நிறுவனம் முதலில் தொடர்புகொண்டது திரையரங்க உரிமையாளர்களில் அபிராமி ராமநாதன்; அதற்கடுத்த நபர் திருப்பூர் சுப்பிரமணி. இவர்கள் சொல்கிற விஷயங்களை தியேட்டர் உரிமையாளர்கள் காதுகொடுத்துக் கேட்டனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு இங்கு சங்கம் இருந்தாலும் அவ்வமைப்பை ரியல் இமேஜ் கண்டுகொள்ளவில்லை. அந்தளவுக்கு சுப்பிரமணி, அபிராமி ராமநாதன் இருவரின் தாக்கம் தியேட்டர் வட்டாரத்தில் இருந்தது.

இவர்களை ரியல் இமேஜ் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டதோ அதைவிடப் பன்மடங்கு டிஜிட்டல் நிறுவனங்களை முறைப்படிப் பயன்படுத்திக்கொண்டார் சுப்பிரமணி என்கிறார்கள் கொங்கு மண்டல சினிமாப் புள்ளிகள். டிஜிட்டல் நிறுவனங்களால் இவருக்குக் கிடைக்கும் பல மடங்குப் பயன், வருமானங்கள் பிற தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கிடைக்க சுப்பிரமணி முயற்சி எடுத்ததும் இல்லை. அதற்கான வழிகளைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை என்கிறார்கள். அப்படி எதையும் இவர் செய்துவிடக் கூடாது என்பதற்காகப் பிற தியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் பங்குத் தொகை 10% என்றால் சுப்பிரமணி நடத்தும் தியேட்டர்களுக்கு 40% தரப்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு கோவை ஏரியாவில் சுமார் 68 தியேட்டர்களைக் குத்தகைக்கு நடத்திவருகிறார் சுப்பிரமணி. ’உரிமையாளர்களால் நடத்த முடியவில்லை; அதனால் நான் நடத்துகிறேன்’ எனப் பேட்டிகளிலும், சங்கக் கூட்டங்களிலும் கூறிவருகிறார் சுப்பிரமணி.

தியேட்டர் உரிமையாளர்கள் யாருக்கும் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், தியேட்டருக்கு அட்வான்ஸ், மாதந்தோறும் வாடகை கொடுத்து சுப்பிரமணியால் மட்டும் தியேட்டரை லாபகரமாக எப்படி நடத்த முடிகிறது என்கிற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக எழக்கூடியதே. இதற்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

நாளை காலை வரை காத்திருங்கள்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon