மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018

மத்திய அரசின் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் கூடாது!

மத்திய அரசின் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் கூடாது!

‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் காலம் தாழ்த்தும் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் கூடாது’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (மார்ச் 5) விடுத்துள்ள அறிக்கையில், “ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதற்கு 20 நாள்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் இறுதிக்குள் அமைப்போம்’ என மத்திய அரசு இதுவரை உறுதியாகக் கூறாத நிலையில், இப்படி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிகிறது. எனவே, பிரதமரிடமிருந்து இதுதொடர்பான வாக்குறுதி எதுவும் வராதபோது இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது மத்திய அரசின் தந்திரத்துக்குப் பலியாவதாகவே பொருள்படும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “தமிழக அரசு இதில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது. பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் சிக்கிவிடக் கூடாது” என வலியுறுத்தியுள்ள அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை எப்படி அமைக்க வேண்டும், அதில் எத்தனை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், அவர்களுக்கான தகுதி எப்படி இருக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர் மன்றம் விரிவாக வரையறுத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மீண்டும் விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் அழைப்பு விடுப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் சாக்குப்போக்கு சொல்வதற்கே வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

“எனவே, இதுதொடர்பாக எந்த முடிவையும் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களோடு கலந்தாலோசித்தே தமிழக அரசு எடுக்க வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon