மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 17 அக் 2019

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் ஆய்வுகளும்!

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் ஆய்வுகளும்!

ஜெ.ஜெயரஞ்சன்

இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக நேற்று (05.03.2018) வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. மற்றொருபுறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சியெல்லாம் தேவையில்லை; இந்துத்துவாவும் சங் பரிவாரும் மெய்யறு அரசியலும் மட்டுமே போதுமானவை எனக் கருதுவோர் உண்டு.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய இரு வழிகளில் பயணிக்கலாம். ஒரு வழி, மேலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பொருள்களை (மதிப்பு அதிகம் கூட்டப்பட்டவை) உற்பத்தி செய்வதன் வாயிலாக விரைவான வளர்ச்சியை அடையலாம். இதை High Road என்பார்கள். மாறாக, ஆரம்பக்கட்டத் தொழில்நுட்பம் கொண்டு அதற்குப் பதிலாக நம்மிடம் பெருமளவில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குறைவான அளவில் மதிப்புக் கூட்டல் (Value Addition) கொண்ட பொருள்களை உற்பத்தி செய்யலாம். ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக இதைப் புரிந்துகொள்ளலாம். நம் நாட்டிலிருந்து பெருமளவில் பின்னலாடைகள் ஏற்றுமதியாகின்றன. திருப்பூர் நகரத்திலிருந்து மட்டுமே வருடம் ரூ.25,000 கோடிக்குப் பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதைக் குறைவான கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களைக் கொண்டு சிறிய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி பின்னலாடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். இதன் விளைவாக, திருப்பூர் நகரிலிருந்து ஏற்றுமதியாகும் பொருளின் மதிப்பு மிகவும் குறைவாகவே தொடர்ந்து வருகிறது. இதை Unit value என்று கூறுவார்கள். திருப்பூரின் Unit value 1 டாலர் என்ற அளவிலேயே தொடர்கிறது. இதையே உயர் தொழில்நுட்பம் கொண்டு தயாரித்தால் Unit value உயரும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருள்களின் (Software) மதிப்பும் மிகவும் குறைவானதே. மாறாக, அயர்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் மென்பொருளின் Unit value மிகவும் கூடுதல். இதே போன்றவைதான் பொறியியல் பொருள்களும். Low Road’லிருந்து High Road’க்கு மாற உயர் தொழில்நுட்பம் தேவை. உயர் தொழில்நுட்பம் எவ்வாறு உருவாகும்? அடிப்படை ஆராய்ச்சிகள் வாயிலாக மட்டுமே இது சாத்தியமாகும். அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பொருளாதாரங்கள் உயர் தொழில்நுட்பத்தை உருவாக்கிப் பெரும் செல்வம் ஈட்டுகின்றன. அந்தத் தொழில்நுட்பத்தை வழங்கி சீனா போன்ற நாடுகளில் பொருளை உற்பத்தி செய்து பெரும் லாபம் பார்க்கின்றனர். அமெரிக்கா ‘Micro chip’களை வடிவமைப்பதும் சீனம் அதைத் தயாரிப்பதும் தொடர்கிறது.

மேற்கு உலக நாடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு அந்நாடுகளுக்குப் பொருள் உற்பத்தி செய்வதால் ஈட்டும் லாபத்துக்கு ஓர் எல்லை உண்டு. இதை நன்குணர்ந்த சீனம் தனது தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுக்கப் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை மின்ட் பத்திரிகையில் நாராயண் ராமச்சந்திரன் என்பவர் 05.03.2018 அன்று கட்டுரையாக எழுதியுள்ளார்.

சீனம் தற்போது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத் துறையில் பெரும் கவனம் செலுத்துகிறது. தொலைத்தொடர்பு, உயிரியல், விண்வெளி, கணினி, செயற்கை நுண்ணறிவு, நானோ டெக்னாலஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்ற ஜனவரி மாதம் அமெரிக்காவின் National Science Foundation ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை சீனத்தின் பெரும் பாய்ச்சலைப் படம்பிடிக்கிறது. 2016ஆம் ஆண்டு சரித்திரத்திலேயே முதன்முறையாக சீனத்திலிருந்து வெளியான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை அமெரிக்காவிலிருந்து வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கையை விஞ்சியது என்கிறது அந்த அறிக்கை. 2016ஆம் ஆண்டு சீனம் 4,26,000 கட்டுரைகள் வெளியிட்டபோது அமெரிக்கா 4,09,000 கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டது தெரிகிறது.

இதைச் சாதிக்கப் பெரும் முதலீடுகளையும் சீனம் செய்கிறது. வருடா வருடம் சீனம் அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இத்தொகை அமெரிக்கா வருடா வருடம் செலவழிப்பதை விட சற்றே குறைவாகும். அது அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடுவதில் அமெரிக்காவைப் பின்தள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது புலப்படுகிறது.

உலகில் உள்ள எல்லா நாடுகளும் செலவிடும் தொகையில் சீனம் செலவு செய்யும் தொகையின் பங்கு 21 விழுக்காடாகும். ஆண்டுக்கு 18 விழுக்காடு என்ற அளவில் இந்தச் செலவை சீனம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 2,00,000 மாணவர்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் பட்ட மேற்படிப்பை முடிக்கும் வேளையில் சீனத்தில் 4,00,000 மாணவர்கள் படித்து முடிக்கின்றனர். கடந்த 10 வருடங்களாகவே, சீனத்தில் அறிவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றோர் எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகம். அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறுவோர் மூவரில் ஒருவர் வெளிநாட்டு மாணவர். அவர்களில் பெரும்பாலானோர் சீனத்தவர். (இதில் இந்திய மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.)

சீனத்திலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புப் படித்த அறிவியல் அறிஞர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு ஈர்க்கச் சிறப்புத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது சீனம். ஆனால், வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் இங்கு திரும்புவதில்லை. ஒன்றிய அரசும் அவர்களை மீண்டும் ஈர்க்க எந்தத் திட்டமும் போடவில்லை.

இந்த ஆராய்ச்சிப் பாய்ச்சலின் விளைவாக சீனத்தில் பிரமிக்கத்தக்க நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மரபணு ஆய்வில் உலகில் மேற்கொள்ளப்படாத ஆய்வுகள் சீனத்தில் நடந்தேறுகின்றன. நிலவுக்கு யாரும் செல்லாத பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக, மேற்கு உலக நாடுகளையும் விஞ்சும் தொழில்நுட்பங்களை உருவாக்கச் சீனம் எடுத்துவரும் முயற்சியின் பலனாக, சீனம் Low Road என்ற பாதையிலிருந்து High Road வளர்ச்சிப் பாதைக்கு மாறத் தோது செய்து வருகிறது. இனிமேல் அந்நாடு உலகின் தொழிற்சாலையாக மட்டுமே திகழாது; இனி அதனிடம் தொழில்நுட்பமும் இருக்கும். தொழிற்சாலைகளும் இருக்கும். சீனத்தின் வளர்ச்சியை விஞ்சி நாங்கள் வளர்கிறோம் எனப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா செலவிடும் தொகை (ஆராய்ச்சிக்கு) ஆண்டுக்கு 36 பில்லியன் டாலர்கள். இந்தியா காணும் கனவுக்கு அது செலவிடும் தொகை மிகவும் சொற்பம். பணம் என்பது ஒரு சிறு பிரச்சினை. பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. (இது அறிவியல் துறையில் மட்டுமல்ல. சமூகப் பொருளாதார ஆய்வுத் துறையிலும்தான்). இரண்டும் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித் தீவுகளாக இயங்குகின்றன. பல்கலைக்கழங்கங்களில் ஆய்வுப் பணிகள் மிகவும் சொற்பம். ஆய்வு நிறுவனங்களில் பாடம் நடத்தப்படுவது இல்லை. இதன் விளைவாகப் பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு சந்தைக் கூடமாகச் சீரழிந்துவிட்டன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளபோதும் அவற்றிலிருந்து சொல்லிக்கொள்ளும் படியான ஆய்வுகள் வெளிவரவில்லை. இந்தப் போக்குக்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. Tata Institute Fundamental Research, Indian Institute of Science, National Cetre for Biological Science போன்ற சில இடங்களில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அங்கு எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ள முடியும்?

தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு 7 கோடிப் பேர் இருக்கிறார்கள். 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், உலகத் தரத்தில் ஓர் ஆய்வாவது இங்கு நடைபெறுகிறது என்று நம்மால் கூற முடியுமா? இதுவேதான் இந்தியா முழுமைக்குமான நிலை. இதில் பெரும் பேச்சுப் பேசி கனவு காண்பது மட்டும் குறையாமல் நடைபெறுகிறது. இந்தப் போக்கு தொடருமானால் சீனா அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விஞ்சி வளரும்போது (High Road) இந்தியா ஒரு mediocre அறிவியல் தொழில்நுட்பத் துறையைக் கூட வளர்த்தெடுக்க முடியாது. இதன் தொடர்ச்சியாகப் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டமான High Road என்ற பாதை கானல் நீராகிவிடும். நாட்டுக்கும் உய்வில்லை; நாட்டு மக்களுக்கு உய்வில்லை. இதை முன்னெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு செலவைக் குறைத்து பெரும் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக உருவாக்குவதில்தான் முனைப்பாக இருக்கிறது. நீண்டகாலத் திட்டமிடல் என்பதே இல்லாமல் செயல்படுகிறோம் என்பதுதான் இன்றைய நிலை.

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதார பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon