மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பேச்சு அதிகாரிகள் கோபம்!

டிஜிட்டல் திண்ணை:  முதல்வர் பேச்சு அதிகாரிகள் கோபம்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

“தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாநாடு தொடங்கியிருக்கிறது. இன்று மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதை, மின்னம்பலத்தின் 1 மணிப் பதிப்பில் எழுதியிருக்கிறோம். பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு இது. பழனிசாமி முதல்வரான பிறகு அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற வருத்தம் அமைச்சர்களிடம் இருந்துவந்தது. இதைப் பலமுறை அமைச்சர்கள் முதல்வரிடம் சொல்லிவிட்டார்கள். முதல்வரும் சில முறை அதிகாரிகளைக் கூப்பிட்டுப் பேசியும் பார்த்தார். ‘செஞ்சுடுறோம் சார்...’ என சொன்னாலும் அதிகாரிகள் தரப்பிலிருந்து அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு இல்லை என்பதை முதல்வரும் உணர்ந்தே இருந்தார்.

கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரிடம், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு டெண்டர் தொடர்பாக அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர். ஆனால், அந்த அதிகாரியிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வரவே இல்லையாம். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் அதிகாரிகள் மாநாட்டுக்கு முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. அதிகாரிகள் மீது முதல்வருக்கு உள்ள கோபம் அவரது பேச்ச்சில் அப்பட்டமாகவே தெரிந்தது.

‘பொதுமக்களுக்கு வெளிப்படையாகப் பணியாற்ற வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும். அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டியதும் நீங்கள்தான். நகைப் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ரோந்துப் பணி இன்னும் அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு நீங்கள் இரு துருவங்கள் போல விலகி நிற்காமல் கண்களைப் போல இணைந்து பணியாற்ற வேண்டும். சூதாட்டம், குட்கா, தடை செய்யப்பட்ட அத்துமீறல் நடந்தால் அந்த காவல் நிலையத்தில் உள்ளவர்களே பொறுப்பு...’ என்றெல்லாம் முதல்வர் பேசினார்.

இந்த குற்றங்கள் எல்லாம் தமிழகத்தில் தொடர்கதையாக நடந்துவருகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே முதல்வரின் பேச்சு அமைந்திருந்தது.

முதல்வர் பேசப் பேச, அதிகாரிகள் சிலரது முகம் மாற ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். மதியம் உணவு இடைவேளை சமயத்தில், அதிகாரிகளுக்குள் இந்த விஷயத்தை ரொம்பவே தீவிரமாக டிஸ்கஸ் செய்தபடி இருந்தார்கள். ‘அவரு பேசுறதை எல்லாம் பார்த்தால், நாமதான் ஏதோ கொள்ளையடிக்கிற ஆட்களோட கூட்டு வெச்சிட்டு இருக்கிற மாதிரி பேசினாரு. தப்பு பண்ணிட்டான்னு எவனையாவது புடிச்சிட்டு வந்தா உடனே, ஆளுங்கட்சி அமைச்சரும், எம்.எல்.ஏ.வும்தான் போன் போடுறாங்க. அப்புறம் எந்த நடவடிக்கை எடுக்க முடியும்? ’ என்று ஒரு அதிகாரி சொல்ல... ‘இனி யாரு போன் போட்டாலும் முதல்வரை பேச சொல்லுங்க... நாங்க சொல்லிக்கிறோம்னு சொல்லிடுங்க. கட்சிக்காரன்னு சொல்லிட்டு யாரு வந்து எதைக் கேட்டாலும் செஞ்சு கொடுக்கவே கூடாது’ என்று இன்னொரு அதிகாரி கோபத்தில் சொன்னாராம்.

இப்படி முதல்நாள் கூட்டமே அதிகாரிகளை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.தொடர்ந்து ஒரு கேள்வியும் ஃபேஸ்புக்கிடமிருந்து வந்தது.

“அதிகாரிகள் பேசியதெல்லாம் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்காதா?” என்பதுதான் ஃபேஸ்புக் போட்ட கேள்வி.

பதிலை அடுத்த மெசேஜாக டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். “போகாமல் எப்படி இருக்கும்? முதல்வருடன் நெருக்கம் காட்டும் சிலர் இதையெல்லாம் உடனுக்குடன் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சிரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘இதெல்லாம் நடக்கும்... இப்படியெல்லாம் எதிர்ப்பு வரும்னு தெரியாமலா நான் பேசுவேன். எல்லாமே எனக்கு தெரியும். இவ்வளவு நாளா அவங்க என்ன செஞ்சுட்டு இருந்தாங்களோ அதைத்தானே நான் பேசினேன். உண்மையை சொன்னா யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அவங்களுக்கு வந்திருக்கு. அவங்க செய்யுறது தப்புன்னு அவங்க உணரணும். எங்க ஆளுங்க தப்பு செஞ்சா நான் பார்த்துக்கிறேன். கண்டிக்கிறேன். அதுக்காக அதிகாரிகள் செய்யுறதைப் பார்த்துட்டு இனியும் என்னால சும்மா இருக்க முடியாது’ என்று சொன்னாராம் எடப்பாடி.” என்று முடிந்தது பதில் மெசேஜ். அதற்கு கட்டை விரலை உயர்த்தும் சிம்பலை பதிலாகப் போட்டுவிட்டு, அப்படியே காப்பி செய்தும் ஷேர் செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப், ஆஃப்லைனில் போயிருந்தது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon