மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனை!

மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனை!வெற்றிநடை போடும் தமிழகம்

புனேயில் உள்ள எம்ஐடி விஸ்வசாந்தி குருகுல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின்போது, இரண்டு பெண் கண்காணிப்பாளர்கள் மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதாகக் கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, நுழைவுத் தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருப்பதற்கு, அவர்கள் சோதனைக்குட்படுத்தபடுவார்கள். எம்ஐடி விஸ்வசாந்தி குருகுல உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 80 மாணவிகளின் உடையைக் களைந்து சோதனையிட்டுள்ளதாக ப்ரித்விராஜ் கபூர் மெமோரியல் ஜூனியர் கல்லூரியின் மாணவிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அப்பள்ளிக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் சனிக்கிழமை (மார்ச் 3) லோனி கல்போர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கிய பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து பெண் கண்காணிப்பாளர்கள் மாணவிகளை அழைத்துச் சென்று உடைகளைக் களைந்து சோதனையிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாணவி காஜல் ஜாதவ் கூறுகையில், “கண்காணிப்பாளர்கள் ஜானகி பதக் மற்றும் ஆஷா பாட்டீல் எங்களை தினமும் தேர்வு அறைக்கு வெளியே சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, பின்பு வேறு அறைக்கு அழைத்துச் சென்று உடைகளைக் கழற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். குறிப்பாக, இந்த சோதனை எங்கள் பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே நடந்தது. எம்ஐடி மற்றும் ஏஞ்சல் ஜூனியர் கல்லூரி மாணவிகளுக்கு இந்தச் சோதனை நடத்தப்படவில்லை” என்றார்.

மாணவி மோனிகா ஷிடோல் கூறுகையில், "கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாணவிகளைச் சோதனை செய்தனர். பிப்ரவரி 28 அன்று, காப்பியடிக்கும் வகையில் ஏதாவது பேப்பர் இருக்கிறதா என்பதை சோதிக்க என்னை அழைத்துச் சென்றனர். நான் மறுத்து, எனது பெற்றோரின் அனுமதியைக் கேட்கும்படிக் கூறினேன். அதுவரை இதுகுறித்து எந்த மாணவியும் வாய் திறக்கவில்லை. என் பெற்றோரிடம் இதைப் பற்றிக் கூறிவிட்டேன். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னார்கள்” என்றார்.

எம்ஐடி விஸ்வசாந்தி குருகுல உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் வீரேந்திர பாவிஸ்கர் கூறுகையில் " மாணவர்களிடம் பிட்டு பேப்பர் இருக்கிறதா என்பதைச் சோதிக்க சோதனை செய்தோமே தவிர, மாணவிகளின் உடைகளைக் களையச் சொல்லவில்லை” என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ப்ரித்விராஜ் கபூர் மெமோரியல் ஜூனியர் கல்லூரி அதிபர் காவ்லி சீதரம் மஹாலுக் கூறுகையில், "நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பள்ளியிலேயே தேர்வு மையத்தை இயக்கிவருகிறோம். ஆனால் ஒருமுறைகூட மாணவர்களைச் சோதிக்கவில்லை. உடைகளைக் களைந்து சோதனை மேற்கொள்வது மிகவும் ஒழுங்கற்றது மற்றும் அத்தகைய செயலில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்களுக்கு எதிராக புகார் செய்யப்படுவது அவசியம் எனக் கூறினார்.

லோனி கல்போர் காவல் நிலையத்தின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் பாலசாஹேப் கஹனே, "இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்துவோம்” எனக் கூறினார்.

நீட் தேர்விலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon