சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியலுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் 2017ஆம் ஆண்டு பெண் குழந்தையொன்றைத் தத்தெடுத்தனர். இந்நிலையில், தங்களுக்கு வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். குழந்தைகளுக்கு ஆஷர் சிங், நோவா சிங் எனப் பெயரிட்டுள்ளனர்.
சன்னி லியோன் தனது பதிவில், “இது கடவுளின் திட்டம்! 3 குழந்தைகளுடன் குறுகிய காலத்திலேயே குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். பல ஆண்டுகள் கழித்து ஆஷர் சிங், கோவா சிங், நிஷா கவுருடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்திருக்கிறது. எங்கள் இரட்டைக் குழந்தைகள் சில வாரங்களுக்கு முன்புதான் பிறந்தனர். ஆனால் பல ஆண்டுகளாகவே எங்கள் இதயங்களிலும் கண்களிலும் வாழ்ந்துவந்தனர். எங்களுக்குச் சிறப்பானதை அளிக்கவே கடவுள் திட்டமிட்டிருக்கிறார். எங்களுக்குப் பெரிய குடும்பத்தைத் தந்திருக்கிறார். மூன்று குழந்தைகளின் பெருமையான பெற்றோர் நாங்கள். உங்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சி!” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த இரட்டைக் குழந்தைகள் எங்களுடைய குழந்தைகள்தான். வாடகைத் தாய் மூலம் இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நாங்கள் குடும்பமாக முழுமையடைந்திருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.